அன்பை வலியுறுத்தும் காவியமே கம்ப ராமாயணம்:பேராசிரியை பர்வீன் சுல்தானா
By காரைக்குடி
First Published : 04 October 2015 04:35 AM IST
அன்பையும், பாசத்தையும் வலியுறுத்தும் காவியமாக கம்ப ராமாயணம் உள்ளது என, கல்லூரி பேராசிரியை இ.சா.பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 60-ஆம் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கம்ப (க)விதை எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
தமிழர் பாரம்பரியத்தில் வீட்டின் நிலைக் கதவு வைக்கும்போதும், கோபுரக் கலசங்களிலும் விதையை வைப்பது வழக்கம். உலகின் கடைசி உயிர் வாழ்வதற்குரிய உணவை விதையாக விட்டுச்செல்லும் மரபு, தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.
இலக்கியவாதிகள் சமூகத்தில் ரசவாத மாற்றத்தை ஏற்படுத்திட முடியுமா என்றால், முடியும் என்பதற்கு கம்பரும், பாரதியும், பாரதிதாசனும் எடுத்துக்காட்டாக உள்ளனர். விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது.
சொல்லில் உள்பொருளை பொதித்து வைப்பதற்கே கம்ப சூத்திரம் எனப் பொருள். கயிற்றில் மஞ்சள் தடவி பெண்கள் கழுத்தில் அணிந்தால் தாலியாகிவிடும். அதுபோலவே கம்பரும் தனது கவிதையில் சூத்திரத்தை விட்டுச் சென்றுள்ளார்.
கம்பரின் கவிதையைப் படித்தால் நமக்குள் பெரும் மாற்றம் நிகழும். கம்பரின் பாட்டிலே எல்லையற்ற பொருள் இருப்பதை பாரதி உணர்த்துகிறார். எனவே, உள்பொருள் விதையைத் தேடி வருங்காலத் தலைமுறைக்காக விதைப்பது அவசியம்.
கம்பர் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது, அவரை ஆட்கொண்டுவிடும். பின்னர், அதில் கம்பர் வெற்றி கொண்டு தனது கருத்தை கூறுவார். தாடகை வதத்தில், ராமர் வில் முதன்முதலாக புறப்பட்டதை சொல்லுக்கு இணையாக கம்பர் கூறுகிறார். தாடகை மீது அம்பு ஊடுருவிச் செல்வதை கல் மீது ஊடுருவுவதாக உருவகப்படுத்துகிறார்.
வாலி வதையின்போது, வாழைப்பழத்தில் ஏற்றப்பட்ட ஊசி போல அம்பு பாய்ந்து நின்றதாகக் கூறுகிறார். ராமரின் அம்பு கல் போன்ற தாடகை உடலை துளைத்துச் சென்றதால் அது வதம். ஆனால், பழம் போன்ற வாலி நெஞ்சில் குத்தி நின்றதால் அது முக்தியானது. கம்பரின் அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வப்போது வெளிப்படும்போது நம்மால் உணரமுடியும். கம்ப ராமாயணத்தில் அன்பை வலியுறுத்தும் வகையிலேயே தாய், மகன், சகோதரன், தங்கை, மனைவி, கணவர் என அனைத்துப் பாத்திரங்களையும் கம்பர் படைத்திருக்கிறார்.
அன்பால் ஈர்த்தல் என்பதே புத்திசாலித்தனம். நன்றியோடிருப்பவர்க்கு இயற்கை உதவும் என்பதை கம்பர் வலியுறுத்துகிறார். அன்புக்குரிய சக்தியை கம்ப ராமாயணம் அளித்து, நம்மை அறிவுறுத்தி, வழிநடத்துகிறது என்றார்.
No comments :
Post a Comment