Thursday, January 26, 2023

அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகள் 2023



தமிழக அனைத்துக் கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி -2023

வணக்கம்.  காரைக்குடியில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நாங்கள், இளைய தலைமுறையினரின் இலக்கிய உணர்வுகளை வளர்க்கும்முகமாக கல்லூரி தமிழக அளவிலான கல்லூரி மாணாக்க மாணாக்கியருக்காக பேச்சுப் போட்டியினை வருகிற 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை  அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காரைக்குடி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்துகிறோம். இந்த ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்து மாணாக்கர்களை அனுப்பிப் பயன்பெறச் செய்திடப் பணிவன்புடன் வேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்வோர் பெயர்ப்பட்டியலை 20.2.2023 அன்றுக்குள்  எமது அஞ்சலக முவரிக்கோ,  kambantamilcentre@gmail.com என்ற மின்னஞ்சல் முவரிக்கோ அனுப்பி உதவ வேண்டுகிறோம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு.

·         கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியில் இருந்து  கலந்து கொள்ளும் மாணாக்கர்களைத் தக்க சான்றிதழுடன் அனுப்பிட வேண்டுகிறோம்.

·         போட்டியில் முதலிடம் பெறுபவர்க்கு கம்பன் திருவிழாவில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பெறும்

·         போட்டிகான மூன்று தலைப்புகளில் ஒன்று போட்டி ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறிவிக்கப்பெறும்.

·         போட்டிக்கு வந்து செல்வதற்குப் போக்குவரத்துச் செலவு வழங்குவதற்கில்லை

·         பரிசு பெற்றோர் கம்பன் திருவிழாவின் முதல்நாள் அன்று நேரில் பரிசினைப் பெற்றுச் செல்ல வேண்டுகிறோம்.

காரைக்குடி                                                                                                    இங்ஙனம்

26.1.2023                                                                                                      கம்பன் கழத்தார்

----------------------------------------------------------------------------------------------------------

போட்டி நாளும் நேரமும் :     26.2.2023 ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல் 2.00 மணி முதல்

 இடம்                                :     ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி

தலைப்பு                            : 1. கம்பன் கண்ட நட்பு,  

   2. கம்பன் கண்ட அன்பு

                                                   3. கம்பன் கண்ட  அறிவு                     

பரிசு விபரம்                     :    முதற்பரிசு , இரண்டாம் பரிசு,   மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்  பரிசுகள், மேலும்  கலந்து கொண்டோருக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள்- முனைவர் இரா. கீதா (6381315244),

முனைவர்  சொ. அருணன் (7904282698) முனைவர் . ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (9842589571) முனைவர் குபேந்திரன் (9976584787)


கம்பன் கழகம் நடத்தும் கம்ப ராமாயண ஒப்பித்தல் போட்டி

 


கம்பன் கழகம், காரைக்குடி

நடத்தும் 

பள்ளி மாணாக்கர்க்கான 


கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி 2023

அன்புடையீர்,

                        வணக்கம்.   காரைக்குடியில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் எம் கழகத்தின் சார்பில் நடத்தப்படும், 6, 7 (பிரிவு-1 ) மற்றும் 8,  9 (பிரிவு -2) ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒப்பித்தல் போட்டி வருகிற 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை  அன்று காலை 10.00 மணிக்கு காரைக்குடி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. போட்டிக்கான பாடல்பகுதிகள் இத்துடன் இணைக்கப்பெற்றுள்ளன. பாடல் பகுதிகளைஉரிய உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு, பொருளுடன் அறிந்து வருதல் போட்டிக்குக் கருத்தில் கொள்ளப்பெறும். பரிசுகளைக் கம்பன் திருவிழாவின் முதல் நாளில் நேரில் பெற்றுச் செல்லலாம். போட்டிக்குத் தங்கள் பள்ளியிலிருந்து மூவரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிப் போட்டியினைப் பயனும், பொலிவும் மிக்கதாக்கித் தரப் பணிவுடன் வேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்வோர் பெயர்ப்பட்டியலை 20.2.2023 அன்றுக்குள் அஞ்சலிலோ, kambantamilcentre@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.


போட்டி நாள்        :     26. 2. 2023  ஞாயிற்றுக் கிழமை.

நேரம்                    :     காலை 10.00 மணி முதல்

இடம்                    :     ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி , காரைக்குடி

போட்டிப்பகுதி     :     ( 6 - 7, 8 - 9  ஆகிய இரு பிரிவினருக்கும்)

   ஆரணியகாண்டம் அகத்தியப்படலம்,    பண்டு        

        எனத்தொடங்கும்      

   பாடல் முதல்,   இப்புவனம் முற்றும் எனத் தொடங்கும் பாடல் வரை

பரிசு விபரம்          :    ஒவ்வொரு பிரிவிற்கும்

                முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு,     

                 மற்றும் ஊக்கப் பரிசுகள் மேலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும்

                  பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

காரைக்குடி                                                                                                      இங்ஙனம்

26.1.2023                                                                                                       கம்பன் கழகத்தார்

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் இரா. கீதா (6381315244), முனைவர்  சொ. அருணன் (7904282698)

முனைவர் . ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (9842589571) முனைவர் குபேந்திரன் (9976584787)

 

கம்பன் கழகம், காரைக்குடி நடத்தும்,

 6-7,8-9 (பிரிவு -1, பிரிவு -2)  ஆம் வகுப்பு மாணவர்க்கான மனப்பாடப் போட்டிப் பகுதி

பண்டு, 'அவுணர் மூழ்கினர்; படார்கள்' என வானோர்,

'எண் தவ! எமக்கு அருள்க' எனக் குறையிரப்பக்

கண்டு, ஒரு கை வாரினன் முகந்து, கடல் எல்லாம்

உண்டு, அவர்கள் பின், 'உமிழ்க' என்றலும், உமிழ்ந்தான். 37

 

தூய கடல் நீர் அடிசில் உண்டு, அது துரந்தான்;

ஆய அதனால் அமரும் மெய் உடையன் அன்னான்;

மாய-வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்

காயம் இனிது உண்டு, உலகின் ஆர் இடர் களைந்தான். 38

 

யோகமுறு பேர் உயிர்கள்தாம், 'உலைவுறாமல்

ஏகு நெறி யாது?' என, மிதித்து அடியின் ஏறி,

மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்

நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39

 

மூசு அரவு சூடு முதலோன், உரையின், 'மூவா

மாசு இல் தவ! ஏகு' என, வடாது திசை மேல்நாள்

நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா,

ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40

 

உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி,-

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங் கண்

தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்-தந்தான். 41

 

அகத்தியன், இராமனை வரவேற்று, அளவளாவல்

'"விண்ணினில், நிலத்தினில், விகற்ப உலகில், பேர்

எண்ணினில், இருக்கினில், இருக்கும்" என யாரும்

உள் நினை கருத்தினை, உறப் பெறுவெனால், என்

கண்ணினில்' எனக் கொடு களிப்புறு மனத்தான். 42

 

'இரைத்த மறை நாலினொடு இயைந்த பிற யாவும்

நிரைத்த நெடு ஞானம் நிமிர் கல்லில் நெடு நாள் இட்டு

அரைத்தும், அயனாலும் அறியாத பொருள் நேர் நின்று

உரைக்கு உதவுமால்' எனும் உணர்ச்சியின் உவப்பான். 43

 

 

'உய்ந்தனர் இமைப்பிலர்; உயிர்த்தனர் தவத்தோர்;

அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள்; ஆனா

வெந் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான்

வந்தனன் மருத்துவன்' என, தனி வலிப்பான். 44

 

ஏனை உயிர் ஆம் உலவை யாவும் இடை வேவித்து

ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்

கான அனலைக் கடிது அவித்து, உலகு அளிப்பான்,

வான மழை வந்தது' என, முந்துறு மனத்தான். 45

 

கண்டனன் இராமனை வர; கருணை கூர,

புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய, நின்றான் -

எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய,

குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46

 

நின்றவனை, வந்த நெடியோன் அடி பணிந்தான்;

அன்று, அவனும் அன்பொடு தழீஇ, அழுத கண்ணால்,

'நன்று வரவு' என்று, பல நல் உரை பகர்ந்தான்-

என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான். 47

 

வேதியர்கள் வேத மொழி வேறு பல கூற,

காதல் மிக நின்று, எழில் கமண்டலுவின் நல் நீர்

மா தவர்கள் வீசி, நெடு மா மலர்கள் தூவ,

போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான். 48

 

பொருந்த, அமலன் பொழிலகத்து இனிது புக்கான்;

விருந்து அவன் அமைத்தபின், விரும்பினன்; 'விரும்பி,

இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து, என்

அருந் தவம் முடித்தனை; அருட்கு அரச!' என்றான். 49

 

என்ற முனியைத் தொழுது, இராமன், 'இமையோரும்,

நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும்,

உன் தன் அருள் பெற்றிலர்கள்; உன் அருள் சுமந்தேன்;

வென்றனென் அனைத்து உலகும்; மேல் இனி என்?' என்றான். 50

 

'"தண்டக வனத்து உறைதி" என்று உரைதரக் கொண்டு,

உண்டு வரவு இத் திசை என, பெரிது உவந்தேன்;

எண் தகு குணத்தினை!' எனக் கொடு, உயர் சென்னித்

துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும்: 51

 

'ஈண்டு உறைதி, ஐய! இனி, இவ் வயின் இருந்தால்,

வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய்;

தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால்,

மாண்டு உக மலைந்து, எமர் மனத் துயர் துடைப்பாய்; 52

 

'வாழும் மறை; வாழும் மனு நீதி; அறம் வாழும்;

தாழும் இமையோர் உயர்வர்; தானவர்கள் தாழ்வார்;

ஆழி உழவன் புதல்வ! ஐயம் இலை; மெய்யே;

ஏழ் உலகும் வாழும்; இனி, இங்கு உறைதி' என்றான். 53

 

'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தித்

தருக்கு அழிதர, கடிது கொல்வது சமைந்தேன்;

வருக்க மறையோய்! அவர் வரும் திசையில் முந்துற்று

இருக்கை நலம்; நிற்கு அருள் என்?' என்றனன் இராமன். 54

 

இராமனுக்கு அகத்தியன் வில், கணை புட்டில் வழங்குதல்

'விழுமியது சொற்றனை; இவ் வில் இது இவண், மேல்நாள்

முழுமுதல்வன் வைத்துளது; மூஉலகும், யானும்,

வழிபட இருப்பது; இது தன்னை வடி வாளிக்

குழு, வழு இல் புட்டிலொடு கோடி' என, நல்கி, 55

 

இப் புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்

ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்,

வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்

முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கா. 56

கம்பராமாயண போட்டிகளுக்கான பரிசுகளை வழங்குவோர்

·         பேராசிரியர்  தி.இராசகோபாலன் அவர்கள் நிறுவியுள்ள அவர்தம் தாயார்

·         திருமதி வேம்பு அம்மாள் அறக்கட்டளை நினைவுப் பரிசு

·         பேராசிரியர் சரசுவதி இராமநாதன் அவர்கள் நிறுவியுள்ள அவர்தம் கணவர்

·         புலவர் க.வே. இராமநாதனார் நி்னைவுப் பரிசு

·         திரு. ப.மெய்யப்பன்,திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர்

·         தெய்வத்திரு கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு

·         பொன்னமராவதி அரு,வே. மாணிக்கவேலு- சரசுவதி  அறக்கட்டளைப் பரிசு

·         தமிழாகரர் பழ. முத்தப்பனார் நினைவுப் பரிசு