Monday, April 25, 2016

கம்பன் கழகம், காரைக்குடி மே மாதக் கூடடம் 2016


                                                              கம்பன் கழகம், காரைக்குடி
                                                                                 67 ஆம் கூட்டம்

அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் மே மாதக் கூடடம்
7.5.2016 ஆம் தேதி
சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு
கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
நிகழ்நிரல்
இறைவணக்கம் - செல்வி எம். கவிதா
வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
கம்பராமாயணத்தில் இயற்கை- பொழிவு. திரு. தி.கி. வேதராஜா
அந்தமானில் நடைபெற்ற கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு பற்றியும்
அந்தமான் கம்பன் கழகத்தி;ற்கு காரைக்குடி தாய் கம்பன் கழகச் சீராட்டு வழங்கித்  
தொடங்கி வைத்தமை குறித்த அறிக்கை முனைவர் மு.பழனியப்பன்
கம்பராமாயணத்தில் தத்துவங்கள் பொழிவு- சுவாமி இராமகிருஷ்ணானந்தா
நனறியுரை- பேரா. மா.சிதம்பரம்
சிற்றுண்டி
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

அன்பம் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ. பழ. அ. உண்ணாமலை ஆச்சி நினைவாக
அவர்தம் புதல்வர் திரு. ப.அ. பழனியப்பன் - உண்ணாமலை தம்பதியருக்குப்
 பல்லாண்டு பல்லாண்டு

Saturday, April 23, 2016

கருத்தரங்கம்- கம்பனில் இயற்கை


அனுமன் இலங்கை மாநகரை வானத்தின் மேல் இருந்து காண்கிறான். அப்போது இலங்கைத்தீவு பொன் கொண்டு இழைத்தது போலவும், மணிகள் கொண்டு பொதித்தது போலவும், மின் கொண்டு அமைத்தது போலவும் ஒளி வெள்ளமாய்த் தோன்றியதாம்  கவிச்சக்கரவர்த்தி கம்பர் புனைந்த நகரத்திறம்  கீழ்வரும் பாடலில்தான் உள்ளது.
பொன் கொண்டு இழைத்த, மணியைக் கொண்டு பொதித்த
மின் கொண்டு அமைத்த வெயிலைக் கொடு சமைத்த?
என் கொண்டு இயற்றிய எனத் தெளிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதியம் முட்டுவன மாடம் (ஊர்தேடு படலம்.1.)
இப்படித்தான் ஒரு நகரம். நட்டநடுவில் ஆகாய விமானத்தளம். அந்தத்தளத்தை வகிடு காட்டும் விளக்குகள். இந்தப் புறமும் அந்தப் புறமும் பெருநகரம். அசையும் ஒளிவெள்ளச்சாலைகள். மேல்நின்று பார்க்க வானம் அளக்க குன்றுகள். இரவின் பிடியில்  கம்பன் சொன்னதைப்போல மின் கொண்டு அமைக்கப்பெற்ற நகரம் தான் போர்ட்பிளேயர்.
அது காலைப்பொழுதில் இயற்கை மாறாத இளந்தீவின் நகரம். பசுமை மாறா பச்சிளம் குழந்தை. ஓடிவிளையாடும் அலைக்கரங்கள். தூரத்தே தெரியும் சிறுசிறு திட்டுகள். எங்கு நோக்கினும் தமிழ்க்குரல். தேசியமொழி பேசும் தமிழர் கூட்டம். அது ஒரு சின்ன ராமநாதபுரம். அது ஒரு பரமக்குடி.
இந்த ஊரில் ஐந்து நாட்கள் அரச மரியாதையோடு தங்கும் சூழல் கவிச்சக்கரவர்த்தியால் ஏற்பட்டது. சக்ரவர்த்தியை நம்பிப் போனவர்கள் அரச விருந்தினர்கள்தாமே. விமானம் தரை தொட்டதும் எங்களை அழைக்க வந்த அன்புக் கரங்கள். மேள தாளம் முழங்குகிறது. படக்கருவிக்காரர் ஓடிவருகிறார். சரி. சரி நாம் வந்த விமானத்தில் யாரே பெரும்புள்ளி வந்திருக்கிறார்கள் என்று ஒதுங்கிநிற்கிறோம். இல்லை. இல்லை. நாங்கள்தான் அந்தப் பெரும்புள்ளிகள். கரம்கோர்த்து, வரவேற்பு சொல்லி
அழைக்கின்றனர் தமிழ்ப்பெருமக்கள். தமிழ் வெள்ளம் பெருகிற்று. கரை கடந்து கடல் கடந்து பெருகிற்று. கடக்க அரிது என்தால்தான் கடலுக்கு கடல் என்று பெயரோ. ஒவ்வொரு விருந்தினரையும் அழைத்துப் போக ஒவ்வொருவர் நியமிக்கப்பெற்றிருக்கிறார். விமான நிலையத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஏதோ மாநாடாம் தமிழ்நாட்டில் இருந்து டெலிகேட்ஸ் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று. ஒவ்வொருவரும் அவருக்கு உரியவரை வரவேற்று ஒரு செல்பி எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். ஆம். எனக்கு இட்ட பணியை நான் செய்துவிட்டேன் என்று வாட்ஸ்அப்பில் உடன் தெரிவிக்க இந்த செல்பி.
தங்கும் விடுதியின் பெயரும் வேதாந்தா விடுதி. அந்தம் ஆதியாக நின்ற எம்பெருமானை வேதாந்தமாக காணும் பேறு எங்களுக்கு. இருவர் கிடக்க மூவர் பகிர்ந்துகொள்ளும் நெருக்கமான பொழுதும் அறையும். மனம் எதைத்தான் போதும் என்றது. எதையும் போதாது என்று சொல்வதே அதன் பழக்கம். வந்தவர்களை அன்பால் வென்றார் திருமதி கிருஷ்ணமூர்த்தி. பேச்சுக்குப் பேச்சு, மௌனத்திற்கு மௌனம் அவர். அவரின்றி ஓர் அணுவும் அசையாது. அவருக்குத் தெரியாமல் அணுகுண்டுகள் பலவற்றை மனதில் வைத்திருக்கிறார் கிருட்டி மூர்த்தி.
இரவு உணவு அனைவரும் கலந்து கொள்ளும் அறிமுகமாகிக் கொள்ளும் வண்ணம் பரிமாறப்பெற்றது. முகங்களை மட்டும் தரிசித்துக் கொண்டோம். மீனில்லா விருந்தில்லை அந்தமானில். சைவமும் இருந்தது இராமனுக்காக. இணைந்து உண்டோம்.
மறுநாள் காலை  எங்கள் எல்லார் தலைமுடியிலும் கம்பன் அமர்ந்திருந்தான். கம்பனை எங்கள் முடியில் சூடி நாங்கள் இருந்தோம். கம்பன் அடிசூடிக்கு அன்றுதான் அவர் வைத்துக்கொண்ட புனைப்பெயரின் எதார்த்தம் புலப்பட்டிருக்கவேண்டும். ஒருமுறை அந்த நீர்த்தளத்தைத் திரும்பிப்பார்த்தால் அழகான வெள்ளை பருத்தியஆடையில் எளிமையாய்க் கம்பன் ஏறக்குறைய அறுபத்து ஆறுபேர் ஆகிய அனைவர் நெஞ்சிலும் இருந்தான்.

 இதனைக் காணவே அந்தமானுக்கு நீங்கள் வந்திருக்க வேண்டும். இதே தலையணியைத் தமிழகத்தின் கோடை வெயிலில் அணிந்து கொண்டு சென்றேன். விநோதமாய்ப் பார்த்தார்கள். இது என்ன தொப்பியில் தமிழ், கம்பன் என்று எண்ணியிருப்பார்களோ தமிழ் நாட்டு மக்கள்.
மெல்ல இயற்கையை ரசித்து பவளப் பாறை தீவினுக்குள் நுழைகிறோம். பவளப் பாறைகளுடன் உள்ளங்கால் உரசி நடந்து, உடல் களைக்கக் குளித்து, இன்னும் கொஞ்சம் அருகில் சென்று பவளப் பாறை காண மூவாயிரத்திற்கு மேல் செலவழித்து, பசியெடுத்து கவவை சாதம் உண்டோம். வந்தவர்கள் மிஞ்சியவர்கள் மீளவும் பயணப்பட்டு ராஸ் தீவிற்குச் சென்று ஆங்கிலேயர்களின் பழைய நினைவு இல்லங்களை, நகர அமைப்பினைக் கண்டு வியந்தோம்.
அவசரமாகக் கிளம்பி செல்லுலார் சிறையை முதல் நாள் பார்த்த இரவுக் கோலத்தில் இல்லாமல் பகல் கோலத்தில் பார்த்தோம். இரத்தம் சிவப்பாய் உறைந்து செறிந்திருக்கிறது இந்தச்சிறையில். இந்தச் சிறையின் ஒரு புறத்தில் தூக்கிலப்பட்டவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய ஒரு கல்மேடை வைக்கப்பெற்றிருந்தது. எத்தனை தேசிய வாதிகளின் இறுதிப் பயணத்தைத் தாங்கி இந்தக் கல் கல்மனதுடன் இன்னமும் இருக்கிறது. ஆனால் சற்று
ஓய்வாய் இருக்கிறது.
இதனைக் கண்டு பின் தமிழகத்துப் பதினெட்டாம்படிக் கருப்பர் முறுக்குமீசை, அரிவாள் தாங்கி உருட்டிய விழிகளுடன் பார்ப்பவரை மண்டியிட வைத்தார். மலைமீது வீற்றிருக்கும் வெற்றிமலைக் குமரன் தரிசனம் தொடர்ந்து கிடைத்தது. தமிழன் எங்கு சென்றாலும் கருப்பரும், முருகனும் முன்னர் வந்து நிற்பார்கள். மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் என்று எங்கும் தமிழரின் தனித்த அடையாளங்கள்.
இரவு உணவு கடற்கரையில். காலாற நடந்தவர்கள் காற்றில்ஏறி
விண்ணைச் சாடியவர்கள் அத்தனைபேரும் அங்கு கலந்து கொண்டு ஒருகுழுப்படம் எடுத்துக்கொண்டோம். மகிழ்விக்க விளையாட்டு ஏற்பாடும் இருந்தது. விளையாட்டில் வெற்றி பெற்றவர் நெய்வேலியைச் சார்ந்த விளையாட்டு ஆசிரியர் என்றால் செம்முதாய் சதாசிவம் அவர்களும் ஐயா நானும் தான் வென்றேன் என்பார்.
அன்று தேதி 10. 4.2016. முழுநாள் நிகழ்வை நடத்தத் தயாராகிறோம் அனைவரும். பொன்வண்ண வளைவில் அந்தமான் தமிழர் சங்கம் தலை நிமிர்ந்துநிற்கிறது.
நுழைவாயிலில் மாவிலைத் தோரணம். வள்ளுவர் மணக்கும் மலர்மாலையோடு
வாழ்த்துக்கள் சொல்லுகிறார். பேராளர்கள் பதிந்து கொண்டு உள்நுழைகிறோம். மிச்சம் மீதி தரவேண்டிய சொச்சங்களைக் கணக்குப் போட்டு வாங்கிக்கொள்கிறோம். கொடுக்க வேண்டிய கருத்தரங்கப் பொருள்களை ஒப்படைத்து ஒப்பம் பெற்றுக்கொள்கிறோம்.
கருத்தரங்கம் கம்பனில் இயற்கை என்ற தலைப்பினைப் பெற்றதால் அச்சடிக்கும் தாள்வழி அறிவிப்புகளைத் தவிர்த்து மின்னஞ்சலைப் பயன்படுத்தினோம். கருத்தரங்கப் பையும் இயற்கை சார்ந்து சணல்பையாக அமைத்தோம்.எங்களால் முடிந்த இயற்கைப் பணி.
காலை மிகச் சரியாக சொன்ன நேரத்திற்குக் கருத்தரங்கு தொடங்கியது. இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து இதனைத் தொடர்ந்து அந்தமான் அன்பர் பொறியார் கிருஷ்ண மூர்த்தி அவர்களின் வரவேற்புரை. அவரைப் பற்றிச் சொல்ல ஆயிரம் பக்கங்கள் வேண்டும் என்றாலும் இந்தப் பக்கத்தில் சொல்லிவிடுவது நல்லது. ஒற்றை மனிதனின் திட்டம் பல நூறு
இயக்கவாதிகளை உருவாக்கியது என்பது கிருஷ்ணமூர்த்தியின் தனிச்சிறப்பு. ஆறுமாத காலமாக குடும்பம் மறந்து, அலுவலகத்தில் அவரசத்தகவல்களுக்குப் பதில் தந்து எப்பொழுதும் கம்பன் கருத்தரங்கப் பணியைச் செய்துவந்த தலைமகன் அவர். எது எப்போது இடைஞ்சலைத் தந்தாலும் அந்த இடைஞ்சலையும் சரி செய்துவிடுகிறது அவரின் பாஸிட்டிவ் பேச்சு. கம்பன் தனக்கு லிப்டில் முன்னேற்றங்களைத் தந்து கொண்டிருக்கிறான் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. உண்மைதானே.
கருத்தரங்க மலரை வெளியிட்டுப் பேசினார் காரைக்குடி கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன். அவரது பேச்சில் மூன்றாம் உலகத்தமிழக் கருத்தரங்கு நடத்துவது நடப்பது எல்லாம் கம்பன் அடிப்பொடி என்ற குருவின் அருளாலும் கம்பனின் திருவருளாளும் என்றார். ஏறக்குறைய எண்பது கட்டுரைகள் அடங்கிய கட்டுரைத்தொகுப்பு அன்று வெளியிடப்பெற்றது. இதனைப் பெற்றுக்கொண்டார் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த பேராளர் டி.ஏ லட்சுமிராஜன்
இவ்விழாவில் அந்தமான் தமிழர் சங்கத்தலைவர் திரு. காஜா மொய்தீன் முன்னிலை வகித்துச் சிறப்பித்தார.;  சுவாமி சுத்தானந்த சரஸ்வதி அவர்கள் இராமகாதையின் பல்நோக்குத் திறன்களை வியந்து பேசினார். அடுத்து  பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னை ஆங்கிலத் துறைத்தலைவர் முனைவர் க.செல்லப்பன் வாழ்த்துரை வழங்கினார். இவ்வாறு தொடங்கிய இக்கருத்தரங்க நிகழ்வு இதன்பின் மூன்று அரங்குகளில்  குழுவிவாதமாக நடைபெற்றது. கம்பன் அடிப்பொடி அரங்கம், மு.மு.இஸ்மாயில்அ;ரங்கம், ரசிகமணி அரங்கம் என்ற பெயரில் கம்பன் உருவமெழுதிய வண்ண அறிவிப்புத்தாள் இவ்வரங்கங்களை அடையாளப்படுத்தியது.
முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் க. இராஜாராம், முனைவர் அறிவாழி, திருவாளர் ந. ஜெயராமன், திரு. காளைராசன், திரு. கமலா தோத்தாத்திரி ஆகியோர் முற்பகலில் அரங்கத்தலைமை வகித்தனர். மாலையில் முனைவர் சங்கர வீரபத்திரன், முனைவர் இரா. காமராசு, முனைவர் மா. சிதம்பரம், திரு. கோபால், திரு கண்ணதாசன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் க. செல்லப்பன் ஆகியோர் பிற்பகல் அமர்வில் அரங்கத் தலைமை ஏற்றனர்.
ஏறக்குறைய அறுபது கட்டுரைகள் வாசிக்கப்பெற்றன. இக்கருத்தரங்க பற்றிய மதிப்புரையை மதுரை மீனாட்சி கல்லூரியின் இணைப் பேராசிரியர் முனைவர் யாழ்.சு சந்திரா வழங்கினார். அதில் அவர் கட்டுரைகளின் தரம் பற்றி மதிப்பிட்டார்.
இதன்பின் அந்தமான் கம்பன் கழகத் தொடக்கவிழா நடைபெற்றது.
வரவேற்புரை முனைவர் மு.பழனியப்பன் வழங்கினார். இவ்விழாவிற்கு அந்தமான் நீகோபார் தீவுகளின் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிக விஷ்ணு பதரே அவர்கள் தலைமை ஏற்று இக்கருத்தரங்கின் வெற்றியைப் பாராட்டி கம்பன் கழகத்தினைத் தொடங்கி வைத்தார். காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் தாய்க்கழகம் என்ற நிலையில் புதிதாகத் தொடங்கப்படும் கிளைக்கழகங்களுக்கு கம்பரும் கற்றுச் சொல்லியும் படம், தமிழ்த்தாய் படம், ஒரு கம்பராமாயணப் புத்தகம், நூற்றியொரு பொற்காசுகள் ஆகியனவற்றை காரைக்குடி கம்பன் கழகச் செயலர் கம்பன்அடிசூடி பழ.பழனியப்பன் அவர்கள் வழங்கினார். அந்தமான் கிளை அன்பர்கள் பெற்றுக்கொண்டுக் குழுப்படம் எடுத்துகொண்டனர்.
இவ்விழாவில் திரு. தி.நா. கிருட்டிணமூர்த்தி அவர்களின் சாமானியன் பார்வையில் கம்பன் என்ற  நூல் வெளியிடப்பெற்றது. இதனை இலக்கியச் சுடர் த.இராமலிங்கம் வெளியிட்டார். மலேசியாவின் இராஜாபிள்ளை அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் கருத்தரங்கப் பேராளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பெற்றது. விவேகானந்தா பள்ளி முதல்வர் திரு. விஜயகுமாரும் மற்றையோரும் இதனை வழங்கினர். அரங்கில் வாசிக்கப்பெற்ற கட்டுரைகளில் அரங்கத்தலைவர்கள் தேர்ந்த நான்கு கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பெற்றன. திருமதி தெய்வானை பழனியப்பன், திரு அருணன், திருமதி அ. நிர்மலகுமாரி, திருமதி இந்திரகுமாரி ஆகியோர் சிறப்புப் பரிசுகளைப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விவாத மேடை நடைபெற்றது. இவ்விவாத மேடையின் தலைப்பு மானுடம் வெல்லத் துணைநின்ற பாத்திரம் எது? என்பதாகும். இதில் எட்டுப் பாத்திரங்கள் பற்றி எண்மர் பேசினர். காலைமுதல் மாலை வரை சலிக்காமல் கேட்ட அன்பர்களுக்கும், சலிக்காமல் கலந்து கொண்ட அறிஞர்களுக்கும் நன்றிகள்.
முக்கியமான நன்றிகள் போர்ட்பிளேயர் தொலைக்காட்சிக்குச் சொல்லவேண்டும். அந்தமான் தூர்தர்ஷனில் மிக நீண்ட நாளைக்குப் பின் தமிழ் நிகழ்ச்சிக்கு முழுமையான இடம் வழங்கப்பெற்றிருப்பது பாராட்டத்தக்கது. ஓடி, ஓடி அந்த அன்பர்கள் தமிழ் வளர்த்தனர்.
மதிய உணவைப் பற்றிச் சொல்ல மறந்து போனேன். இரவு உணவு சிறந்ததா மதிய உணவு சிறந்ததா என்றால் இரவு உணவே சிறந்தது. ஏனெனில் நாங்கள் விடைபெற வேண்டிய இரவுவிருந்து: அது.
கம்பன் விழாவை நடத்தி அசந்து போன நேரத்தில் உடன் எழுந்துக் கருத்தரங்கப் பணிகளைச் செய்தோம். குடும்பத்தில் ஐயோ பாவம் என்ற பச்சாதாபம், வெளியில் வெளிநாட்டில் கருத்தரங்கு நடத்தறாங்களாம் என்ற எக்காளம் இவற்றுக்கிடையில் நின்று நிதானித்து நண்பர்கள் சேதுபதி, அருணன், குறிஞ்சி வேந்தன் துணையிருக்க
கம்பன் அன்பர்கள் சுப்பு, பேரா. சிதம்பரம், பேரா. செந்தமிழ்ப்பாவை வழிநடத்த நடந்தோம். கால்வலி அதிகம். இன்னும் முக்கால் வலி இருக்கிறது. அந்தமான் படங்களுடன் ஆய்வுக்கோவையை ஒவ்வொரு பேராளர் வீட்டிற்கும் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். மாருதி இருந்தால் தேவலாம். செலவில்லாமல் ;எல்லார் வீட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்திடுவார்.



Sunday, April 3, 2016

அந்தமானில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு நடைபெறுகிறது

கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்
பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயணமூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்க நிகழ
உள்ளது. தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். எண்பதிற்கும் மேற்பட்ட
கருத்தரங்கக் கட்டுரைகள் அக்கருத்தரங்கில் வாசிக்கப்பெற உள்ளன. அவற்றின்
அச்சுவடிவ ஆய்வுக்கோவையும் அன்றே வெளியிடப்பெறுகிறது.
கம்பன் கண்ட இயற்கை நலத்தை வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்டு இக்கருத்தரங்கம்
நிகழ்கிறது. ஒருநாள் முழுநிகழ்வாக நடக்க உள்ள இக்கருத்தரங்கின் அழைப்பினை
இதனுடன் இணைத்துள்ளோம்.

இவ்வழைப்பினை ஏற்றுத்

தாங்கள் வருகை தர அன்புடன் வேண்டுகிறோம். மேலும்
இவ்வழைப்பினைத் தாங்கள் பரவலாக்கம் செய்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.