இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும், பிரியக்கூடாது!:தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்
By காரைக்குடி
First Published : 04 October 2015 04:36 AM IST
தமிழை வளர்ப்பதற்கு ஊருக்கு ஊர் புதிது புதிதாக இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டுமே தவிர, இருக்கின்ற இலக்கிய அமைப்புகள் பிரிந்து பிரிந்து செயல்படக் கூடாது என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
காரைக்குடி, கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மகாலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தின் நிகழ்ச்சியில் புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் கம்ப காவலர் தி. முருகேசனின் நினைவேந்தல் கூட்டத்தில் அவர் மேலும் ஆற்றிய உரை:
தமிழகத்தில் ஒரு காலத்தில் தீ பரவட்டும் என்ற கோஷம் எழுந்தபோது, "கம்பன் அடிப்பொடி' தலைமையில் இதே காரைக்குடி மண்ணில்தான் "கம்ப காதை தீயென பரவட்டும்' என கம்பன் புகழ் பாடி தமிழ் வளர்க்கும் கூட்டம் வீறுகொண்டு எழுந்தது.
கம்பன் அடிப்பொடியின் தலைமையில் கம்பன் திருநாளை விழாவாகக் கொண்டாடியதும், தமிழ்த் தாய்க்கு ஆலயம் எழுப்பியதும் இதே காரைக்குடி மண்ணில்தான்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கம்ப காதையின் மூலம் தமிழ்ப் பற்றை வளர்த்த காரைக்குடி கம்பன் அறநிலை பிரிந்து கிடப்பது தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை. 2004-இல் "தமிழால் இணைவோம்; தமிழுக்காக இணைவோம்' என்கிற கோஷத்தை தில்லியில் கூடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் எழுப்பிய தினமணியால் கம்பன் கழகங்களின் தாய்க் கழகமான கம்பன் கழகம் பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தினமணி ஆசிரியராக பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளாக, எங்கெங்கு தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனரோ, அங்கெல்லாம் பணிகளுக்கு இடையேயும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதன் காரணம், தமிழ் அமைப்புகள் உற்சாகமடையட்டும், தமிழ் இலக்கியப் பணியைத் தொடரட்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் ஊருக்கு ஊர் தமிழ் இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும்.
இலக்கியம் பேசப்பட வேண்டும். அதன்மூலம், அடுத்த தலைமுறை இலக்கியப் பேச்சாளர்கள் உருவாக வேண்டும். மக்களுக்குத் தமிழ்ப்பற்றும் இலக்கியத்தின்பாற்பற்றும் ஏற்பட வேண்டும் என்பதுதான் தினமணியின் குறிக்கோள்.
இலக்கிய அமைப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக வேண்டுமே தவிர தற்போதுள்ள இலக்கிய அமைப்புகள் இரண்டாகப் பிரிவது என்பது ஏற்புடையதல்ல.
செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் இலக்கிய அமைப்புகள் பிரிவது தமிழுக்கு பலமல்ல என்பதை பிரிந்திருக்கும் அமைப்புகளின் இரு தரப்பினரும் உணர வேண்டும்.
தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கால கட்டத்தில் இருக்கும்போது, தமிழ் அமைப்புகளில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட தமிழைப் பாதிக்கும். இதனால், வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தமிழ் அமைப்புகள் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, மோதித் தீர்க்கக்கூடாது.
புதுவையில் கம்பன் விழாவை அரசு விழாவாக நடத்திய பெருமை புலவர் அருணகிரி, பெரியவர் கோவிந்தசாமி முதலியார், முருகேசன் ஆகிய மூவரையும் சாரும். புதுவை கம்பன் கழகத்துக்கு முருகேசன் ஆற்றிய பணியானது அளப்பரியது.
இலக்கிய விழாக்களுக்கு புதுவையைப் போல தமிழகத்திலும் அரசு நிதியுதவி அளிக்கவேண்டும். இலக்கிய அமைப்புகள் கூடி விவாதிக்கவும், கூட்டம் நடத்தவும் இலவசமாக சிற்றரங்குகளை கட்டித் தர வேண்டும். தமிழ் வாழத் தமிழ் இலக்கிய அமைப்புகள் அவசியம். ஆகையால், இலக்கிய அமைப்புகளுக்கு அரசு ஆதரவு தர வேண்டும். இலக்கியப் பேச்சாளர்களுக்கு விருது தரும் அரசு, இலக்கிய அமைப்புகளுக்கு விருது தருவதில்லை. அவர்களுக்குத்தான் கம்பன், வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை வழங்கி கெளரவிக்க வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
நிகழ்ச்சிக்கு, கம்பன் கழகத் தலைவர் பழ. பழனியப்பன் வரவேற்றார். இதில், துணைத் தலைவர் மாணிக்கவேல், கவிஞர் அப்பாச்சி சபாபதி, சரவணச்செல்வன், வித்யாலட்சுமி ஆகியோர் பேசினர். பேராசிரியர் மா. சிதம்பரம் நன்றி கூறினார்.
No comments :
Post a Comment