Monday, April 16, 2018

தினமணியில்

பெரியவர்கள் ஒருவரையொருவர் போற்ற வேண்டும்: சுகி.சிவம்

கம்ப ராமாயணம் வலியுறுத்துவதுபடி, பெரியவர்கள் ஒருவரையொருவர் போற்ற வேண்டும் என்றார் சொல்வேந்தர் சுகி. சிவம்.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 80-ஆம் ஆண்டு முத்து விழாவாக கம்பன் திருவிழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணா திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கிய இவ்விழாவுக்கு தலைமை வகித்தும், சிங்கப்பூர் கவிஞர் பொறியாளர் அ.கி. வரதராசனாருக்கு கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கியும் சுகி. சிவம் பேசியதாவது:
இந்தியாவின் தெய்வ வரலாற்றில் ராமாயணம் தனித்த ஆளுமை உடையது. அந்த வரலாற்றில் ராமனுடைய பெரும் புகழ், தனிச்சிறப்பு பேசப்படுகிறது. கம்ப ராமாயணத்துக்கு இங்கே எதிர்ப்புக் கிளம்பிய காலத்தில், கம்பனை கொண்டாட விதைபோட்டவர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.சி, கம்பன் அடிப்பொடி போன்ற பெரியவர்கள்தான். அகம்பாவம் இல்லாமல் அன்றைக்கு வாழ்ந்துகாட்டிய அவர்களெல்லாம் பீஷ்மர்களாகவே போற்றப்படவேண்டியவர்கள். பெரியவர்களை ஒருவரையொருவர் எப்படிப் போற்ற வேண்டும் என்பது ராமயணத்தில் படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது. தசரதனின் சபையில் விசுவாமித்திரர் உள்ளே வருகிறபோது தன்னையும் அறியாமல் எழுந்து நின்று கும்பிட்டு வரவேற்று, குருவுக்கு உரிய மரியாதையை தந்தவன் தசரதன். ஒருவரையொருவர் மதிக்கவேண்டும் என்பதற்கு சான்றாக விசுவாமித்திரரும், வசிஷ்டரும் இருக்கிறார்கள் என்பதை கம்ப ராமாயணத்தில் கம்பர் காட்டுகிறார்.
பொதுவாக மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாம் கற்பனையாகவே தீர்மானித்துவிடுகிறோம். கோபத்தில் வெளிப்படையாக பேசுபவர்கள் நல்ல மனதுடையவர்கள். அரசியலில் இரு பிரிவுகளாக இருந்தவர்களே சேர்ந்துவிட்டார்கள். இங்கேயும் இரண்டு விழாவாக நடப்பது ஒன்றாக ஆகவேண்டும் என்பதே நம் விருப்பம் என்றார்.
விழாவில், பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கம்பன் ஒரு யுகசந்தி என்ற நூலை கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெளியிட, அதனை கம்பன் கழக துணைத்தலைவர் அரு.வே. மாணிக்கவேலு பெற்றுக் கொண்டார். மகேஸ்வரி சற்குரு எழுதிய கம்பன் தந்த மகாமந்திரம் என்ற நூலை தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் வெளியிட, அதனை கம்பன் அடிப்பொடி உறவினர் மீ. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசனார் ஏற்புரையாற்றினார். கம்பனடித்தொண்டன் மு. பழனியப்பன் வரவேற்றுப்பேசினார்.
விழாவில், கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன், கோவை விஜயா பதிப்பகம் ராமநாதன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், கம்பன் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments :

Post a Comment