------------------------------------------------------------------------------------------
தமிழ்த் தொண்டத் தொகை பாடல்கள்
-------------------------------------------------------------------------------------------
ஆதிமுதல் தமிழாசான் அகத்தியனார்க்கு அடியேன்
அரன்முனிவும் அஞ்சாத நக்கீரர்க்கு அடியேன்
ஓதுபுலன் அழுக்கற்ற உயர்கபிலற்கு அடியேன்
ஓங்கு புகழ் தாங்கிவளர் ஒண் பரணர்கு அடியேன்
தீதறு நல் சீத்தலையூர்ச் சாத்தனுக்கும் அடியேன்
திருநிறைமாங்குடி மருதன் செழும் புலவர்க்கு அடியேன்
மூதறிஞன் மருதன்இள நாகனார்க்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே!(1)
காசில்இலக் கணந்தரு தொல்காப்பியனுக்கு அடியேன்
காவிரிப்பூம்பட்டினத்துக் கண்ணனுக்கு அடியேன்
வீசுபுகழ் அவ்வை எனும் மெய்ப்புலவர்க்கு அடியேன்
வியன்மதுரை வணிகன் இளவேட்டனுக்கும் அடியேன்
பேசரிய பெரும்புலவன் பேயனுக்கும்அடியேன்
பிறங்கிறையே பரசு பெருந்தேவனுக்கு அடியேன்
மோசிவளர் கீரனெனும் முதுபுலவற்கு அடியேன்
மும்மைவளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே (2)
பாலைநயம் பாடுபெருங் கடுங்கோவுக்கடியேன்
படர்முல்லை கவியருள் நல்லுருத்திரனுக்கு அடியேன்
ஆலிநெய்தல் திணைதரு நல்லந்துவனுக்கும் அடியேன்
அருமை பலதழுவு பிசிர் ஆந்தைக்கும் அடியேன்.
காலமுணர் கனியன் பூங்குன்றனுக்கும் அடியேன்
காதல் நெறி கரைகண்ட அம்மூவற்கு அடியேன்
மூலங்கிழான் ஆவூர் முதுபுலவற்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (3)
வன்பரணர் தன்னோடு மாமூலற்கு அடியேன்
மாறோக்க நப்பசலை மணித்தாய்க்கும் அடியேன்
நன்னாகன் நன்னாகை நல்வேட்டற்கு அடியேன்
நரிவெரூஉத் தலையனுடன் நக்கண்ணைக்கு அடியேன்
பொன்முடிக்கும் நச்செள்ளைப் புலவர்க்கும் அடியேன்
பொத்திக்கும் நல்ஓரம்போகிக்கும் அடியேன்
முன்வள்ளல் ஆய்பாடும் மோசிக்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே! (4)
மதுரையளக்கர் மகனாம் மள்ளனுக்கும் அடியேன்
வளர் ஒக்கூர் மாசாத்தன் மாசத்திக்கு கடியேன்
அதிமேதை அறிவுடைய நம்பிக்கும் அடியேன்
அறுவை இள வேட்டனுடன் ஆந்தைக்கும் அடியேன்.
துதிபெறு நல் மருத்துவன் தாமோதரனுக்கு அடியேன்
துகளறு கல்லாடனெனும் தொல்லோனுக்கு அடியேன்
முதுகாக்கை பாடினியாம் மூதறிவுக்கு அடியேன்
மும்மை வளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே (5)
பெய்நேயம் பிறங்கு கோப்பெருஞ்சோழற்கு அடியேன்
பெருங்குன்றூர்க்கிழார் பேரி சாத்தற்கு அடியேன்.
தொய்யாத பெரும்புலமை கயமனுக்கும் அடியேன்
சொல்லு மிளநாகனுடன் உலோச்சற்கும் அடியேன்
பொய்யாத வாய்மையிளந்திரையனுக்கும் அடியேன்
புகழ்புரியும் சேந்தன் மகன் பூதனுக்கும் அடியேன்
மொய்வீரம் விளக்கும்உயர் நெட்டிமைக்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளிரித்தாள் சரணே! (6)
அரிசில்கிழார், குடவாய்க் கீரத்தற்கும் அடியேன்
அரும்புலமைக் குமட்டூர் வாழ் கண்ணற்கும் அடியேன்
பெருந்தலையூர்ச் சாத்தன் இளங்கீரற்கும் அடியேன்
பேசுமிடைக் காடனெனும் பெரியோனுக்கு அடியேன்
கருது காப்பியாற்றுக் காப்பியற்கும் அடியேன்
கணக்காயன் தத்தனுடன் கந்தரத்தற்கு அடியேன்
முருகுவெறி பாடிய காமக்கண்ணிக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (7)
செழுங்குமணற் போற்று பெருஞ்சித்திரனுக்கு அடியேன்
தீதறு கோவூர்க் கிழானென் செம்மலுக்கும் அடியேன்
விழுமியபாத் தருவெள்ளி வீதிதனக் கடியேன்
மிளிர்தாயங் கண்ணனெனும் மெய்ப்புலவற்கு அடியேன்
பழுதிலறம் அருளுதி்ருவள்ளுவற்கு அடியேன்
பண்கூத்தோடு இயல் அளக்கும் இளங்கோவுக் கடியேன்
முழுமதியன் மேகலை செய்ச் சாத்தனுக்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே (8)
அரனருளும் காரைக்காலம்மைக்கும் அடியேன்
அருள்மாலே பாடுகின்ற ஆழ்வார்க்கு அடியேன்
திருமுறைகள் எழுமருள் மூவர்க்கும் அடியேன்
சி்வபுராணம் மொழியும் மணிவாசகற்கு அடியேன்
சரிநிகரில் கவி கம்பன் தனிப்புலவற்கு அடியேன்
தவநெறியால் மந்திரம் சொல் திருமூலற்கு அடியேன்
முருகுதவழ் தி்ருத்தக்க முனிவனுக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே (9)
செம்புலமை நிறையாண்டாள் எனும் செல்விக்கடியேன்
திருத்தொண்டர் சீர்பரவும் சேக்கி்ழார்க்கு அடியேன்
ஐம்புலன்வெல் பட்டினத்தில் அடிகட்கும் அடியேன்
அருக்கவிஞன் செயங்கொண்டான் அருள்பரணிக்கு அடியேன்
பம்புபல சந்தமருள் அருணகிரிக்கு அடியேன்
பாரதம் செய் வில்லி எனும் பண்பாளற்கு அடியேன்
மொய்ம்புலமைத் தாய்மான முனிவற்கும் அடியேன்
மும்மை வளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (10)
வழுத்துபுகழ் நாதமுனி மாதவனுக்கு அடியேன்
வளமிக்க ஈடு அருளும் நம்பிள்ளைக்கு அடியேன்
பழுத்த உரை தருபெரியவாச்சானுக்கு அடியேன்
பாவை சீர் பரவு மிரா ராமானுஜனுக்கு அடியேன்
செழித்தமுதல் விளக்கம் செய் பிள்ளானுக்கு அடியேன்
திகழ் வடக்குத் திருவீதிப் பிள்ளைக்கும் அடியேன்
மொழிக்குமுதல் இடந்தருமால் அடியார்கட்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (11)
மெய்கண் குரவனெனும் வியன் ஞானிக் கடியேன்
வீறுடைய அருணந்தி சிவனுக்கும் அடியேன்
துய்யமன மறைஞான சம்பந்தற்கு அடியேன்
சொல்லரிய கீர்த்திநிறை உமாபதிக்கு அடியேன்
அய்யமிலாது உயர் கச்சியப்பனுக்கும் அடியேன்
அருங்கவி தோலாமணித்தேவன்தனக்கும் அடியேன்
மொய்யறி்வுச் சி்வஞான முனிவனுக்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே!(12)
துறைசை சிவப்பிரகாத் தூயோனுக்கு அடியேன்
துகளறுநல் குமரகுரு பரஞானிக்கு அடியேன்
மறைமங்கை வருபிள்ளைப் பெருமாளுக்கு அடியேன்
மனோன்மணியம் தருமனந்தைச் சுந்தரர்க்கு அடியேன்
இறைதிரு விளையாடற் பரஞ்சோதிக்கு அடியேன்
இந்தியர்தம் மகாகவியாம் பாரதிக்கும் அடியேன்
முறைஞான வடலூரின் வள்ளலுக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (13)
தென்களந்தை திகழவரு புகழேந்திக்கு அடியேன்
திரகூட ராசப்பக் கவிராயற்கு அடியேன்
பின்வளர் மூதுரை அவ்வைப் பிராட்டிக்கும் அடியேன்
பெரும்புலமை அரசகேசரி தனக்கும் அடியேன்
மன்னகவி அதிவீரராமனுக்கும் அடியேன்
மதிக்குமொரு துறைக்கோவை அமிர்தகவிக் கடியேன்
முன்னொப்பிலக்கணஞ் செய் கால்டுவெல்லுக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே! (14)
அன்ற தமிழ் ஜீயு போப் பய்யருக்கும் அடியேன்
அருள் சீறாப்புராணம் செய் உமறுக்கும் அடியேன்
தோன்றுளிரும் குணங்குடியார் மஸ்தானுக்கு அடியேன்
தேசிக விநாயகனாம் செழுங்கவிக்கும் அடியேன்
ஊன்றுகோல் உடைய மாம்பழக்கவிக்கும் அடியேன்
உயர் பெஸ்கி் எனும் வீரமாமுனிவற்கு அடியேன்
மூன்றுலா செய் கவிஒட்டக் கூத்தனுக்கும் அடியேன்.
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (15)
விந்தை முக விலாசம் உரை வில்லியப்பற்கு அடியேன்
மீனாட்சி சுந்தரநற் பிள்ளைக்கும் அடியேன்
சந்தநி்றை தமிழ் உதவு படிக்காசுக்கு அடியேன்
தமிழில் நகை தரும் காள மேகத்திற்கு அடியேன்
சிந்தைகவர் இரட்டையர்தம் செந்தமிழுக்கு அடியேன்
சேசுபுகழ் இசை கிருஷ்ண பிள்ளைக்கும் அடியேன்
முந்தையர் நேர் பாரதிதாசன் தமிழுக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே! (16)
பழுத்த தமிழ் உ,வே.சா பருணிதற்கும் அடியேன்
பதிப்புமுறைக்கொரு வையாபுரி தனக்கும் அடியேன்
எழுத்துலகின் பரிதி திரு.வி.கவுக்கும் அடியேன்
எத்தாலும் உயர் வ.வெ.சு வுக்கு அடியேன்
வழுத்துபுகழ் வி,கோ. சூ மாண்பனுக்கும் அடியேன்
வ.உ.சி எனமிளிரும் வள்ளலுக்கும் அடியேன்
முழுத்தமிழுக் குழைத்த திருமறைமலைக்கும்அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே (17)
சிந்தை கவர் முத்தொள்ளாயிரம் செய்தோற்கடியேன்
திகழ் நந்திக் கலம்பகம் ஈய் செழுங்கவிக்கும் அடியேன்
நந்தனருள் கோபால கிருஷ்ணருக்கும் அடியேன்
நல்லஅருணாசலக்கவி நாகடத்திற்கு அடியேன்
கந்தகர்ணாமுத கோடிச் வரனுக்கும் அடியேன்
காவடிச் சிந்துதரு அண்ணாமலை ரெட்டிக்கு அடியேன்
முந்துகவி குஞ்சர னாம் பாரதிக்கும் அடியேன்
மும்மை வளர் செந்தமிழ்த்தாய் முளிர்த்தாள் சரணே! (18)
தன்னிகரில்லா முத்துத் தாண்டவற்கும் அடியேன்
தனிவளமார் பதந்தரு பொன்னையனுக்கும் அடியேன்
மன்னுபுகழ் பாஸ்கரனாம் சேதுபதிக்கு அடியேன்
வளர் பாண்டித்துரை என்னும் மகிபனுக்கும் அடியேன்
பன்னரிய புரவலனாம் பெத்தாச்சிக்கு அடியேன்
பண்ணாய்ந்த ஆபிரகாம் பண்டிதனுக்கு அடியேன்
முன்னொப்பில் முனிவிபுலானந்தனுக்கும் அடியேன்
மும்மை வளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே (19)
தன்னகர்இல் சுப்பிரநல் தீபக் கவிக்கு அடியேன்
தமிழ்நடையைச் சித்திரம் செய் வ.ரா.வுக்கும் அடியேன்
பொன்னியின்நற் புதல்வன் எனும் கல்கிக்கும் அடியேன்
புகழ்ப்புதுமைப் பித்தன் எனும் சொ.விக்கும் அடியேன்
பண்ணுபல நாடகம் செய் பம்மலுக்கும் அடியேன்
பண்டித மாமணி்யான கதிரேசற்கு அடியேன்
முன்னொத்த பெருவள்ளல் சடையப்பற் கடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளிர்த்தாள் சரணே! (20)
அரசஞ் சண்முகப் பிள்ளையாம் புலவற் கடியேன்
அருள் திருப்பாப்புலியூர்ப் பெருஞானிக்கடியேன்
கரம்பலிய வள்ளிமலைக் கவின் புலவற் கடியேன்
கலித்தொகையைக் கொணர் அனந்த ராமையற் கடியேன்
தரமிகுந்த கோ வடிவேல் தத்துவனுக்கு அடியேன்
சந்தமுதிர் தண்டபாணிச் சாமிக்கும் அடியேன்.
முரசறைந்த தமிழ் உமாமகேசற்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளிரிதாள் சரணே (21)
மாபுலவன் ராகவையங்காருக்கு அடியேன்
மதிக்கவிஞன் ஆம் பாம்பன் சாமிதனக்கு அடியேன்
தேமதுர தமிழ் வழங்கும் எல்லப்பற்கு அடியேன்
திருப்போருர்ச் சிதம்பர நற் சாமிக்கு அடியேன்
ஆமுதல் தேர் ஆறுமுக நாவலர்க்கும் அடியேன்
அருந்தமிழ் ஆய் கனகசபைப் பிள்ளைக்கும் அடியேன்
மூவகையார் தமிழ் தெளிந்தார் எல்லார்க்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (22)
பொன்னான உரைசெய் இளம்பூரணற்கும் அடியேன்
புகழ்நச்சினார்க்கினிய புலவற்கும் அடியேன்
இன்னமுதாய் உரை தருபேராசிரியற்கு அடியேன்
இனியஉரை தரு தெய்வச்சிலையாற்கும் அடியேன்
நன்னயச் சேனாவரைய நம்பிக்கும் அடியேன்
நயவுரை செய் அடியார்க்கு நல்லாற்கும் அடியேன்
முன்னிறையனார் என்னும் முதுபுலவற்கு அடியேன்! (23)
வள்ளுவத்திற்கு உரைதெரித்த மணக்குடவற்கு அடியேன்
வளர்புலமை மிகுபரிமேல் அழகற்கு அடியேன்
தள்ளரிய இலக்கணம் செய் பவணந்திக்கு அடியேன்
தனியாப்பின் அருங்கலம் செய் சாகரனுக்கு அடியேன்
ஒள்ளலங்காரம் உதவும் உயர்தண்டிக்கு அடியேன்
ஒரு பன்னீர் பாட்டியலை உபகரித்தோர்க்கு அடியேன்
மொள்ளவளர் கச்சியப்ப முனிவனுக்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (24)
ஆதிநிகண்டு அருளுதிவாகர முனிவற்கு அடியேன்!
அவன் சேயாய் வளர்ந்த முனி பிங்கலனுக்கு அடியேன்
சோதி என மிளிர்சூடாமணி முனிவற் கடியேன்
சொல்லையக ராதிதொரு இரேவணற்கு அடியேன்
ஓதுமகராதி பல உதவியர்க்கும் அடியேன்
உயர்வளமார் கலைக்களஞ்சியம் தொகுத்தோர்க்கு அடியேன்
மூதறிவால் தொகை நூல்கள் கோத்தளித்தார்க்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (25)
ஓதுமிசைப் பண்கண்ட ஒண்கலைஞர்க்கு அடியேன்
ஒலியவைக்கு வரியமைந்த உயர்தபதிக் கடியேன்
தீதறுநல் பரதகலை தெரி்ந்தவர்க்கும் அடியேன்
திகழுபல மூலிகை ஆய் சித்தர்கட்கும் அடியேன்
வேதிமுதல் கலைநூல்கள் வித்தகர்க்கும் அடியேன்
விண்ணோடு மண்ணளந்த வித்தகர்க்கும் அடியேன்
மூதறிவால் கட்டடநூல் மொழிந்தார்க்கும் அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே!(26)
கம்பனை முன் பதிவேங்கடாசலற்கும் அடியேன்
காதலுடன் பின்பதித்தோர் எல்லார்க்கும் அடியேன்
அம்புவியில் அதற்குரை செய் அனைவர்க்கும் அடியேன்
அதற்கென்றே உயிர்வாழ்ந்த ரசிகைமணிக்கு அடியேன்
செம்புலவன் மோ.வே. கோ. திருவடிக்கும் அடியேன்
செய்குதம்பிப் பாவலனாம் செழும் புலவற்கு அடியேன்
மொய்ம்பு சிறை செங்கல்வராயனுக்கும் அடியேன்
மும்மை வளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (27)
வழுத்துமென்தாய் உயர்நாச்சியம்மையார்க்கு அடியேன்
மதித்தந்தை திருசாமி நாதற்கு அடியேன்
எழுத்தறிவு நல்கு அரங்கவாத்தியார்க்கும் அடியேன்
இலக்கியஞ் சொல் சிதம்பரப்பேர் ஏந்தலுக்கும் அடியேன்
பழுத்த தமிழ் நிறை சேதுப்பிள்ளைக்கும் அடியேன்
பலவழியில் ஊக்குவித்த ராஜாஜீக்கு அடியேன்
முழுத்தகுதிக் குருதேவர் தெ.பொ.மீக்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (26)
பனையோலை எழுதிநூல் படித்தோர்கட்கு அடியேன்
பழுதிலவை அச்சிட்டுப் பரப்பினார்க்கும் அடியேன்
பினையவற்றை ஓதுவித்த பெரியோர்க்கும் அடியேன்
பெருநூல்கள் காத்தவற்றைப் பேணினார்க்கும் அடியேன்
கனைகடலும் கடந்து தமி்ழ் காட்டினர்க்கு அடியேன்
காலமெலாம் தமிழ்ப்பணியே கருதினர்க்கும் அடியேன்
முனைநூல்கள் படனம் செய் மொய்ம்பினர்க்கும் அடியேன்
மும்மை வளர் செந்தமி்ழ்த்தாய் முளரித்தாள் சரணே! (29)
தொன்றுதொடு தமிழ் மரபைக் காப்பார்கட்கு அடியேன்
துயர் அகலத் தமிழமுதம் ஊட்டுவார்கட்கு அடியேன்
என்றுமுள தென்தமிழ்த்தாய்க்கு எழில் முடியைச் சூட்டும்
எந்தைபிரான் கம்பன்தன் அடியார்க்கு அடியேன்
நின்றுவளர் கம்பன் அற நிலைக் காப்பார்க்கு அடியேன்
நெடிய தமி்ழ்த்தாய்க் கோயில் புரப்பார்கட்கு அடியேன்
முன்றுளிர்க்கும் இடுக்கண் அவை முறிப்பார்கட்கு அடியேன்
மும்மைவளர் செந்தமிழ்த்தாய் முளரித்தாள் சரணே! (30)
No comments :
Post a Comment