Saturday, January 28, 2017

கம்பன் கழக இலக்கியப் போட்டிகள் 2017 முடிவுகள்.


காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய இலக்கியப்  போட்டி முடிவுகள்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் இலக்கியப் போட்டிகள் இன்று (28.1.2017) காலை முதல் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மாநிலம் தழுவிய அளவில் மாணவ மாணவிகள் வருகை தந்து போட்டிகளில் கலந்து கொண்டது சிறப்பிற்குரியதாக அமைந்தது.
  6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ மாணவியருக்காக நடத்தப்பெற்ற கம்பராமாயண மனனப் போட்டியின் முதற்பரிசிற்கு முத்துப்பட்டிணம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. ச. சுபலெட்சுமி  தகுதி பெற்றுள்ளார். இப்பிரிவில் வீரசேகரபுரம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி செ. கார்த்திகாதேவி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி இரா. கார்குழலி, தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவி க. ராஜி, லீடர் மெட்ரிக் பள்ளி மாணவி எம்.சுமித்ராதேவி, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவன் மு. நாராயண கோவிந்தன், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்பள்ளி மாணவர் அ. கார்த்திகேயன் ஆகியோர் ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
     9,10,11, 12 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்ந்த, கம்பராமாயணய மனனப் போட்டியில் முதற்பரிசினைப் பெற புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்பள்ளி மாணவி அரு. அழகம்மை தகுதி பெற்றுள்ளார். மேலும் முத்துப்பட்டணம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி டே.ஸ்டேனிஸ் செரின், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி கே. ஸ்நேகா ஆகியோர் ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
     கல்லூரி அளவில் நடைபெற்ற கம்பராமாயணப் பேச்சுப்போட்டியில் முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம்.ஜி.எம் கல்லூரி மாணவர் சு. சதீஸ்குமார்  தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியின் மாணவர் வி. யோகேஷ்குமாரும், கோபிச் செட்டிப்பாளையம், பி,கே. ஆர்  மகளிர் கல்லூரி மாணவி நா. ஹேமலதா, திருவாருர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் க. தமிழ்பாரதன் ஆகியோர் ஊக்கப் பரிசுகளைப் பெறவும், ஆறுதல் பரிசுகளைப் பெற அமராவதிப் புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி மாணவி இரா. நாச்சாள், காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் கல்லூரி மாணவி அ. தீன்ஷாநூப் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
     கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற திருக்குறள் பேச்சுப்போட்டியில் முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம். ஜி.எம் கல்லூரி மாணவர் சு. சதீஷ்குமார் தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் த.க.தமிழ்பரதன் என்பவரும், ஊக்கப்பரிசுகளைப் பெற கோபிச் செட்டிப் பாளையம், பி.கே. ஆர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி நா. ஹேமலதா, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி பெ. பிரதீப் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
     இப்போட்டிகளின் நடுவர்களாக  திருமதி கண்ணம்மை, திரு உ. கரிகாலன், திரு. ஞா. சிங்கமுத்து, திருமதி தொண்டியம்மாள், திரு. திருநாவுக்கரசு, கவிஞர் நாராயணன், பேராசிரியர் சு.இராஜாராம், பேரா. நா.கார்வண்ணன், திரு.அரு.இராமநாதன், பேராசிரியர். சே. செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் மா. சிதம்பரம், பேராசிரியர் பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அமைந்து இப்போட்டிகளை நடத்தித் தந்தனர்.
     திரு. அரு,வே. மாணிக்கவேலு, திரு. மீ.சுப்பிரமணியம், கரு. மணிகண்டன், பேராசிரியர் கீதா, பேராசிரியர் மு.பழனியப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், திருமதி தெய்வானை பழனியப்பன் ஆகியோர் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
     போட்டிகளுக்கு வருகை தந்த மாணவ மாணவியருக்கும், வழி நடத்திய முதல்வர்களுக்கும், தயாரிப்பு நல்கிய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் காரைக்குடி கம்பன் கழகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

     போட்டிகளில் வென்றவர்களுக்குக் காரைக்குடி கம்பன் கழகம் ஏப்ரல் ஏழாம் தேதி நடத்தும் ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்பெற உள்ளன என்று காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  






Saturday, January 21, 2017

கம்பன் கழகம் (2017) பிப்ரவரி மாதத் திருவிழா, ஆய்வுரை

கம்பன் கழகம், காரைக்குடி
புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன்

அன்புடையீர்
            வணக்கம்
        கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பழ. பழனியப்பன் தம் பெற்றோர் நூற்றாண்டு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை திரு கம்பன் அடிசூடி ‘கைகேயி படைத்த கம்பன்’’ என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்கள்.

     அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி கம்பன் அறநிலைத் தலைவரும் ஆன திரு. சக்தி. திருநாவுக்கரசு அவர்கள் தலைமை ஏற்றுத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்
நிகழ் நிரல்

மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை தேநீர்

6.00 மணி்-  இறைவணக்கம்

6.05. மணி வரவேற்புரை.பேரா. மு.பழனியப்பன்

6.15 மணி தலைமையுரை திரு. சக்தி அ. திருநாவுக்கரசு 

6.30 மணி ஆய்வுரை 
                   கைகேயி படைத்த கம்பன் -  திரு கம்பன் அடிசூடி

7.30 மணி  சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.45 மணி  நன்றி  பேராசிரியர் மா. சிதம்பரம்

7.55 விருந்தோம்பல்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

                                          அன்பும் பணிவுமுள்ள
                                             கம்பன் கழகத்தார்

நன்றிகள்
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் 
அரு,வே. மாணிக்கவேலு –சரஸ்வதி அறக்கட்டளை

நமது செட்டிநாடு இதழ்





நிகழ்ச்சி உதவி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை காரைக்குடி






Kamban Kazhagam Pudukkottai (Part 3) - Nellai Kannan

Tamil Aruvi Maniyan's Amazing Speech at Kamban kazhagam. FRANCE

Seetha Kalyanam | Kamba Ramayanam Upanyasam | Kirupanandha Variyar | கிர...

Vaali Vatham | Kamba Ramayanam Upanyasam | Kirupanandha Variyar | கிருபா...

கம்ப இராமாயணம் இசைப் பேருரை-02வேள்வி காத்தோன் .-மதுரை T N சேஷகோபாலன்.

KAMBA RAMAYANAM SONG கம்ப ராமாயணப் பாடல்

Monday, January 16, 2017

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)




          
 காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
‘செட்டிநாடும் செந்தமிழும்’
என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
                      அறிவிப்புமடல்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாக கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.       
  இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும்வண்ணம், தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்றது; இதன்வழி அடுத்ததலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகிவருகின்றார்கள். ஆண்டுதோறும் திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தம் பெற்றோர் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுப்பொழிவு நிகழ்த்தப்பெறுகின்றது;. அவை நூலாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. டாக்டர் சுதா சேஷய்யன் (தாய்தன்னைஅறியாத), முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு (கம்பனின் மனவளம்), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் எண்ணமும் வண்ணமும்), முனைவர் பழ. முத்தப்பன் (கம்பனில் நான்மறை),முனைவர் ச. சிவகாமி (கம்பர் காட்டும் உறவும் நட்பும்), முனைவர் தெ. ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்), நாஞ்சில்நாடன் (கம்பனின் அம்பறாத் தூணி), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் விண்ணோடும் மண்ணோடும்), திரு, சோம. வள்ளியப்பன் (எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம்), அரிமழம் பத்மநாபன் (கம்பனில் இசைக்கலை) ஆகியோர் உரையாற்றி, அந்த உரைகள்,  அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.  மாதந்தோறும் முதற் சனிக்கிழமைகளில் புதியகோணங்களில் கம்பன்காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தபெற்று, அவை அச்சில் வெளிவர தொகுக்கப் பெற்றுவருகின்றன. முனைவர் சொ.   சேதுபதியின் கம்பன்காக்கும்உலகு, முனைவர் மு.பழனியப்பன் கம்ப வானியல், முனைவர் க. முருகேசனின் தெய்வமும் மகனும்  ஆகிய நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளன.    சாகித்திய அகாதமியுடன் இணைந்து கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற பொருளில் இலக்கிய அரங்கம் நடத்தப்பெற்றது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அ.ச.ஞா, பேரா. ந. சுப்புரெட்டியார்டு, செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டு கொண்டாடப்பெற்றன. கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் டி.கே.சி பிள்ளைத்தமிழ், எம்.எஸ். பிள்ளைத்தமிழ் ஆகியனவும் இவ்வாண்டில் வெளியிடப்பெற்றன. இவ்வாறு  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் காரைக்குடி கம்பன் கழகம் நினைந்து நினைந்துத் தமிழ்த்தொண்டுகளைச் செய்து வருகிறது.
       கம்பராமாயண ஆய்வினையும் வளர்க்க வேண்டி, 2013ஆம் ஆண்டில் கம்பன் திருநாள் பவளவிழா  தொடக்கத்தையும்,  2014ஆம் ஆண்டில் பவளவிழா நிறைவையும் ஒட்டி இரு பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கம்பன் கழகம், காரைக்குடி நடத்திப் பெருமைபெற்றது. இதன் தொடர்வாக  2016 ஆம் ஆண்டு அந்தமானில் ‘‘கம்பனில் இயற்கை’’ என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தியது. இதுவரை 5 கருத்தரங்கத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவ்வாண்டும்( 2017) செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தத் திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
              எதிர்வரும்  ஏப்ரல் மாதம்  7, 8, 9, 10  ஆகிய தேதிகளில் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகள் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.  ‘‘செட்டிநாடும் செந்தமிழும்’’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படத் திட்டமிடப்பெற்றுள்ளது. கோட்டையூரில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் அவர்களின் பூர்வீக இல்லத்தில் கவிதாயினி வள்ளிமுத்தையா அவர்களின் வரவேற்பில் செட்டிநாட்டு்ப் பாரம்பரியத்துடன் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிகழும் நாளன்றே ஆய்வுக்கோவையும் வெளியிடப்பெறும். அன்று முற்பகல் தொடக்கவிழாவும் பல அரங்குகளில் கட்டுரை வாசி்ப்புகளும் நிகழ உள்ளன. மதியம் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு முடிந்து காரைக்குடி கம்பன்கழகம் நடத்தும் ஆண்டுவிழாவில் பங்கேற்கவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. 
கருத்தரங்கக் குழுவினர்
செட்டிநாட்டு இளவல் எம்.ஏ.எம்.ஆர்  முத்தையா, திரு. அரு.வே. மாணிக்கவேலு, திரு.த. இராமலிங்கம்,  திருமதி விசாலாட்சி கண்ணப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் சொ. சேதுபதி, முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், முனைவர் மு.பழனியப்பன்,  முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் மா. சிதம்பரம், திரு. மீ. சுப்பிரமணியம், திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன், சொ. அருணன்
ஆய்வுத்தலைப்புகள்:
1.               செட்டிநாட்டு இலக்கியங்கள்
  சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற
2.               செட்டிநாட்டுத் தமிழறிஞர்களும், செட்டிநாடு போற்றிய தமிழறிஞர்களும்
பண்டிதமணி, சிந்நயச் செட்டியார், வ.சுப.மாணிக்கனார், சோம.லெ., முரு.பழ. ரத்தினம் செட்டியார், ச. மெய்யப்பன், சுப.அண்ணாமலை, வெ தெ. மாணிக்கம், மெ.சுந்தரம், தமிழண்ணல், லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், கம்பனடிப்பொடி, ராய. சொக்கலிங்கனார், ஏ.கே. செட்டியார், சொ. முருகப்பா, சின்ன அண்ணாமலை, சோம. இளவரசு, இரா. சாரங்கபாணி, பா. நமசிவாயம், தேசிகன். 

3.               செட்டிநாட்டுப் படைப்பாளிகளும், செட்டிநாடு போற்றிய படைப்பாளர்களும்.
பட்டினத்தார், கம்பர், பாடுவார் முத்தப்பர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, புதுவயல் சண்முகஞ் செட்டியார், தேவகோட்டை சிதம்பரஞ் செட்டியார், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், ஜீவா, பனையப்பச் செட்டியார்,  கண்ணதாசன், தமிழ்வாணன், அரு. இராமநாதன், அழ.வள்ளியப்பா, அர. சிங்காரவடிவேலன், சோம. சிவப்பிரகாசம், பெரி. சிவனடியான், பூ.அமிர்தலிங்கனார், முடியரசனார்.

4.               செட்டிநாடு சார்ந்த தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள்
கோவிலூர் வேதாந்தமடம், குன்றக்குடி திருமடம்,  பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் நூலகம் (தனவைசிய சங்கம்),  ரோஜாமுத்தையா நினைவு நூலகம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, காரைக்குடி சார்ந்த இந்துமதாபிமான சங்கம்,  இராமசாமி தமிழ்க்கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அண்ணா தமிழ்க் கழகம், வள்ளுவர் கழகம்    கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் மற்றும்  புதுவயல் சரசவதி சங்கம், குருவிக்கொண்டான்பட்டி கவிமணிமன்றம், பி. அழகாபுரித் தமிழ்மன்றம், குமரன், ஊழியன் தனவணிகன், தமிழ்நாடு, தென்றல் போன்ற இதழ்கள்.

இவை தவிர  கருத்தரங்கத் தலைப்பு சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். வாழும் சான்றோரைப் பற்றி எழுதலாம். வாழ்ந்துவருவோர் பற்றி எழுதும்போது அச்சான்றோரின் அனுமதியையும், வழிகாட்டலையும் பெறுவது நலம்.  




 ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கான நெறி முறைகள்:
1.        ஆய்வுக் கட்டுரையைத் தனியொருவராகத் தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம்;
2.   ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்த முயற்சியாக இருத்தல்வேண்டும். ஆய்வாளரே அவரின் கருத்துகளுக்குப் பொறுப்பாவார். கண்டிப்பாக  பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ, மின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல்கூடாது. பொய்த்தகவல்கள் தரப்படக் கூடாது.  அவ்வாறு இருப்பின் அக்கட்டுரை வெளியிடப்பட மாட்டாது. பதிவுக்கட்டணம் திருப்பியளிக்கப் பெறமாட்டாது. தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங்கொண்டும் திருப்பி அனுப்பப்பெறாது. கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்க கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது
3.   ஆய்வுக்கட்டுரைகள் 4 தாளில் இருவரி இடைவெளியுடன் , நான்கு பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடு எழுத்துருவில்  கணினி அச்சாக்கி, மின்னஞ்சல் வழி அல்லது குறுவட்டு வடிவில்  அனுப்பவேண்டும்..
4.        கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  அனுப்பப்பெறும். எனவே கட்டாயம் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்.
5.   கருத்தரங்க ஆய்வாளர்கள் தலைப்புகளைத் தேர்ந்து காரைக்குடி கம்பன் கழக மின்னஞ்சலிலோ, முகநூலிலோ அனுப்பி ஒப்புதல் பெற்றுக்கொள்வது நலம். இதன் காரணமாக ஒரு பொருளையே பலர் எழுதுவது தவிர்க்கப்படும்.

ஆய்வுக் கட்டுரைக்கான கட்டணமும் செலுத்தும் முறையும்
ஆய்வுக்கட்டுரையுடன் ரூ 700 (ரூபாய் எழுநூறு மட்டும்) கட்டணமாகச் செலுத்தப்பெற வேண்டும்.. வெளிநாட்டுப் ஆய்வாளர்களுக்குக் கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் $ 60/= கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக “KAMBAN ACADEMY” என்றபெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பிட கடைசி நாள்
பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும் கட்டணமும் 28-02-2017 க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். காலதாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்கப்படாது.







காரைக்குடி கம்பன் கழகம்  - ‘செட்டிநாடும் செந்தமிழும்’
பன்னாட்டுக் கருத்தரங்கம் - பதிவுப் படிவம்
  பெயர்:        
  கல்வித்தகுதி:
 தற்போதையபணி:
 பணியிட  முழு  முகவரி  (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 இல்லமுழுமுகவரி:     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 கைபேசி எண்:     (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்)                                            
  e-mail id  (மின்னஞ்சல்) (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்.)
கட்டணத்தொகை:
கட்டுரைத் தலைப்பு 
வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்:             
வரைவோலைஎண்:
 இடம்:
நாள்:                                                                                                                                     கையொப்பம்
(படிவத்தினைப் படிகள் எடுத்தும் அனுப்பலாம்)
கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி
Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, "Sayee" 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India
மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com,
வலைப்பூ ; kambankazhagamkaraikudi.blogspot.com
முகநூல்: https://www.facebook.com/karaikudi.kambankazhagam
தொலைபேசி தகவல் தொடர்பிற்கு
முனைவர் மு.பழனியப்பன் 9442913985 முனைவர் மா. சிதம்பரம், 9486326526