Monday, April 16, 2018

தினமணியில்

கம்பன் படைப்பில் பெரிதும் வழிகாட்டுவது ஆசான் சொல்லே!: பட்டிமன்றத்தில் தீர்ப்பு

By DIN  |   Published on : 01st April 2018 12:25 AM  |   அ+அ அ-   |  
கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது ஆசான் சொல்லே என பட்டிமன்ற நடுவராக பேராசிரியர் பர்வீன் சுல்தானா தீர்ப்பு வழங்கினார்.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், கம்பன் திருவிழா - முத்து விழாவில் "கம்பன் படைப்பில் இன்றைக்குப் பெரிதும் வழிகாட்டுவது எவரின் சொல்' என்ற தலைப்பிலான பட்டிமன்றம், கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், தாயின் சொல்லே! என்ற பொருளில் அரசு. பரமேஸ்வரன், ஆசிரியர் கோ.ப. ரவிக்குமார் அணியினரும், தந்தையின் சொல்லே! என்ற பொருளில் பேராசிரியர் மா. சிதம்பரம், தமிழ். திருமால் அணியினரும், ஆசான் சொல்லே! என்ற பொருளில் க. முருகேசன், ப. அறிவொளி அணியினரும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
இந்த 3 அணியினரின் வாதங்களையும் கேட்ட நடுவர் பர்வீன் சுல்தானா, ராமனின் தந்தையாக தசரதன் இருந்தாலும் வசிஷ்டர் என்கிற குருவால் வளர்க்கப்பட்டவன். குருவின் சொல்லால்தான் ராமனால் சீதையை மணமுடிக்க முடிந்தது. அந்த குருவான வசிஷ்டர் ராமனுக்குக் கூறிய உறுதிமொழி என்று கம்பராமாயணத்தில் உள்ள 16 பாடல்களையும் அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்கலாம்.தாய்மார்களும், தந்தைமார்களும் சேர்ந்து சொன்ன அத்தனை விழுமியங்களையும் குருவாசகமாக அந்தப் பாடல்களில் கம்பன் வெளிப்படுத்துகிறான்.
ஒரு மனிதன் எப்படி இருக்கவேண்டும் என, கம்பன் குரு என்கிற வசிஷ்டர் வாயிலாகச் சொல்கிறார். மனிதன் வீரனாகவும், விவேகமுடையவனாகவும் இருக்கவேண்டும் என்றால், இனியசொல் உடையவனாகவும், ஈகை குணத்துடனும் இருக்கவேண்டும் என்பதுதான் அந்த குருவாசகம். மனிதனின் உடலை தூய்மைப்படுத்துவதற்காக எத்தனையோ பொருள்கள் வந்துவிட்டன. ஆனால், மனித மனங்கள் இன்னும் தூய்மையாகாமலேயே இருக்கிறது. மனித மனங்களை தூய்மைப்படுத்துவது ஆசானின் சொல்தான் எனத் தீர்ப்பளித்தார்.
நீதிநெறி உரையரங்க நிகழ்ச்சி: முன்னதாக நீதிநெறி உரையரங்கம் மற்றும் நூல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
"அறம் தலை நிறுத்தல்' என்பதை இன்றைய நெறியாக வைத்து மூத்த வழக்குரைஞர் த. ராமலிங்கம் நெறியாளராக நடத்தினார்.
இதில் "ஆன்மிக உலகில்' என்ற பொருளில் கணேசர், செந்தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பழ. முத்தப்பன், "இலக்கிய உலகில்' என்ற பொருளில் மதுரை பாத்திமா கல்லூரியின் முன்னாள் முதல்வர் விசாலாட்சி சுப்பிரமணியன் ஆகியோரும், நோக்கர்கள் சார்பாக பேராசிரியர் ந. விஜயசுந்தரி, கோவை மகேஸ்வரி சற்குரு, தேவகோட்டை டி. யோகேஷ்குமார் ஆகியோர் தங்களது கருத்துகளாகப் பதிவு செய்தும் முறையிட்டனர். இறுதியில், நெறியாளர் பதிவுரை வழங்கி நெறியரங்கத்தை நிறைவு செய்துவைத்தார்.
அதைத் தொடர்ந்து, பேராசிரியர் சொ. சேதுபதி எழுதி, சென்னை வானதி பதிப்பகம் பதிப்பித்த "கம்பன் கேட்ட வரம்' என்ற நூலை வழக்குரைஞர் த. ராமலிங்கம் வெளியிட, அதனைப் பேராசிரியர் பழ. முத்தப்பன் பெற்றுக்கொண்டார்.

No comments :

Post a Comment