Saturday, May 14, 2016

தேனம்மை லஷ்மணன் அவர்களின் மே மாதக் கூடடம் பற்றிய கருத்துரை

இதுவரை முனைவர் திரு முத்து பழனியப்பனவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்ததைக் கொடுத்திருக்கிறேன்.  கம்பனடிசூடி அவர்கள், முத்து பழனியப்பன் அவர்கள், வேதானந்தா அவர்கள், ஊரன் அடிகள் அவர்கள், ஆகியோரின் உரையின் குறிப்பைப் பகிர்ந்துள்ளேன் .

ஊரன் அடிகள் திருவருட்பா ஆகியவற்றுக்கு உரை எழுதி இருக்கின்றார்கள். இவர்களின் தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. வள்ளலாரும் கம்பனும் என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றார்கள். இதை உமா பதிப்பகம் மூலம் திரு பழனியப்பன் அடுத்துப் பதிப்பிப்பதாகக் கூறி இருக்கின்றார்கள்.  

ஊரன் அடிகள் சொன்ன ஒரு விஷயம் சிந்தனைக்குரியது. கம்பனைச் சிலாகிப்பவர்கள் எல்லாரும் நாத்திகர்கள். ஏனெனில் அவர்கள் இராமனைச் சிலாகிப்பதில்லை. என்றார்.

கம்பனடி சூடி அவர்களின் பேச்சு வழக்கம்போல செறிவாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. முத்து பழனியப்பன் அவர்கள் அந்தமானில் நிகழந்த மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு பற்றிக் கூறினார்கள். அங்கே நமது வலைப்பதிவ சகோதரி சாந்தி லெட்சுமணனும் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அவருக்கும் வாழ்த்துகள் !

கிட்டத்தட்ட 80 பேர் கலந்து கொண்ட அதில் முக்கால் சதவீதம் பேர் முனைவர்கள் இத்தனை முனைவர்கள் கட்டுரை வாசித்த இடத்தில் கம்பனடிசூடி அவர்களின் சரிபாதி தெய்வானை ஆச்சி அவர்கள் வாசித்த ”கம்பனில் உணவு” என்ற கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. எனவே அவர்களை வாழ்த்தினேன். இவர்கள் அனைவரின் கட்டுரையும் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதை வாசித்தேன். முதல் மேடையேற்றத்திலேயே முதல் பரிசு பெற்ற தெய்வானைஆச்சிக்கு எனது வலைத்தளம் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகள்.!!!இனி சின்மயா மிஷனின் ராமகிருஷ்ணானந்தா அவர்களின் உரையின் சாரத்தைப் பகிர்கிறேன். 

கம்பராமாயணம் வால்மீகி ராமாயணம் என ஒரே ஜூகல் பந்திதான். சமஸ்கிருத ஸ்லோகங்களும் கம்பனின் பாடல்களும் என ஏகதேசம் பல்வேறு உலகங்களுக்கும் சென்று வந்த பிரமிப்பு ஏற்பட்டது. 

ஏகத் தத்துவத்தில் ஆரம்பித்து மோட்சத்தில் முடித்தார் . ஜீவாத்மா > ஏகப் பரம் பொருள் > மோட்சம். இதுவே அவர் கூறிய தத்துவ உரையின் சாராம்சம். ஆஞ்சநேயரின் தோளில் ராமர் அமர்ந்திருந்தது பாற்கடலில் உறையும்  ஏகப் பரம்பொருள் திருமாலை ஞாபகப்படுத்தியது என்றும் இறை என்பது ஒன்றே எனவும் கூறினார். 

தத்துவ விசாரங்களை உபநிஷத்துகளிலிருந்தும் வேதங்களிலிலிருந்தும் , யோகங்களிலிலிருந்தும் வால்மீகியின் ஸ்லோகங்களில் இருந்தும் கம்பனின் பாடல்களில் இருந்தும் மேற்கோள் காட்டிப் பேசினார். வால்மீகி உண்மையை மட்டுமே சொன்னார் என்றும் கவிச்சக்கரவர்த்தி அதை நளினமாக நகாசு வேலைகளுடன் சொன்னார் என்றும் கம்பனின் சொல்லாடல் அழகைப் புகழ்ந்தார். கவிச்சக்கரவர்த்தி என்றால் அது கம்பர் மட்டுமே .வேறு யாருமே அந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் அல்ல என்றார்.

அந்த ஏக இறைவன். ஒன்றா பலவா என்றால் ஆம் ஒன்று என்றால் ஒன்று , பல என்றால் பல . இறைவன் இருக்கின்றானா என்றால் ஆம் . இல்லை என்றாலும் ஆம். பார்த்திருக்கிறீர்களா என்றால் ஆம் பார்த்திருக்கிறேன். பார்த்ததில்லையா என்றால் ஆம் பார்க்கவில்லை என இறைவனை உருவாய் அருவாய் உளதாய் இலதாய் எல்லாமுமாய்  இருக்கும் இறைவனை யுத்தகாண்டத்தில் கம்பர் அறிமுகப்படுத்தி இருக்கும் விதம் பற்றிச் சிறப்பித்துக் கூறினார்.

"பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே"

“கர்மண்யேவாதி காரஸ்தே மா ஃபலேஷு கதாசன்
மாமனுஸ்மர் யுத்தம் ஸ. “

“சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேஹம் சரணம் விரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஸ்யாமி மாசுஸஹ. ”

இந்த ஸ்லோகங்களைத் தெரியாதவர்கள் சனாதன தர்மத்திலே இருப்பதே அரிது என்றார்.

”நதியின் பிழையன்று நறும்புனலின்மை ”

அதே போல் நமக்கு நடப்பதெல்லாம் விதியின் பிழை என்று கொண்டால் யாரையும் குற்றம் சொல்லாமல் வாழும் கலை பயின்று விடுவோம் என்றார்.

இராமாயணத்தில் லெக்ஷ்மணனை அண்ணனுக்கு முன் கானகம் செல்லவும் அண்ணனோடு காவலாய் இருக்கவும். அண்ணனுக்கு ஒன்று என்றால் அவனுக்கு முன்னேயே நீயும் சென்றுவிடவேண்டுமெனவும் தாய் சுமித்திரை சொன்னதையும், கானகம் செல்லத் தாய் வரம் கேட்ட போது  அது கைகேயின் பிழை அல்ல என்றும் ஆணையிட்டபோது அது தந்தையின் பிழை அல்ல என்றும் தம்மைச் செலுத்தும் ஊழின் பிழையே என்றும் கூறினார்.

அதே போல் சிறந்த சகோதர பாசம் ( ராமன், லெக்ஷ்மணன், பரதன் , சத்ருக்னன், குகன், சுக்ரீவன், விபீடணன் ) , சிறந்த தொண்டன் ( அனுமன் ) , சிறந்த தாய்ப்பாசம்  ( கைகேயி மேல் கொண்ட அபிமானம். ) , சிறந்த மனைவி ( சீதை ), சிறந்த ராஜா (  ராமராஜ்யம் )  எல்லாம் சிறப்பாக அமையப் பெற்றது கம்பராமாயணமே என்று கூறினார். 

 ஜான் மில்டனின் பாரடைஸ் கெயின் பாரடைஸ் லாஸ்ட்  பாரடைஸ் ரீகெயின் பற்றிக் கம்பராமாயணத்துடன் ஒப்புமை கூறிச் சொன்னார். அகலிகையின் வரலாறு பற்றிச் சொல்லும்போது அவள் எவ்வளவு தூய்மையான பாரடைஸ் கெயின் ஸ்டேட்டில் இருந்தாள் என்றும் இந்திரனால் பாரடைஸ் லாஸ்ட் என்னும் நிலைமைக்கு ஆளானாள் என்றும் பிறகு இராமனின் கால் தூசி பட்டு எப்படி பாரடைஸ் ரீகெயின் என்னும் தூய்மை நிலைக்கு உயர்ந்தாள் என்றும் கூறி இதே போல மனிதர்களாகிய நாமும் பரம்பொருளில் இருந்து வந்து இவ்வுலகத்தன்மையினால் களங்கமாகிப் பின் அப்யாஸத்தின் மூலம் உயர்ந்த பரம்பொருளை அடைய எடுக்கும் முயற்சியே மோட்சத்துக்கு வழி வகுக்கும் எனக் கூறினார். 

மிகச் சிறப்பான இவ்வுரைகளைக் கேட்க நேர்ந்தது நம் பிறவிப் பயன்தான் என்று எண்ணிக் கொண்டேன். இன்னும் கடைசியாகத் தொகுத்து வழங்குவார் என்றும் இன்னும் பேசுவார் என்றும் காத்திருக்க தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகளுக்குள்ளே பேச்சை முடித்து எண்ணங்களின் வீச்சை அதிகப்படுத்தி முந்தாநாள் இரவிலிருந்து இப்போது வரை சிந்திக்க வைத்து விட்டார். கம்ப ரசத்தோடு தத்துவ ஞானத் தெளிவினையும் கொடுத்தது இவர் உரை என்றால் மிகையில்லை. 

இன்னும் இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது என்றும் இறைத் தேடல் முடிவில்லாதது என்றும் கூறிச் சென்றார். கிட்டதட்ட ஏழு நிலைகளைப் பற்றி அவர் கூறினார். என் ஞாபகப் பிசகால் நான் மூன்று, நான்கை மட்டுமே இங்கே பகிர்ந்துள்ளேன். ( குறிப்புகள் எடுக்காதது தவறு என்று புரிகிறது ). இன்னும் இன்னும் அந்த ஏகன் அநேகனைப் பற்றிப் பரவி பரநிலைத் தத்துவத்தில் ஒன்றி உறைவோம். 

thanks to http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post_10.html?m=1

No comments :

Post a Comment