By dn, காரைக்குடி
First Published : 10 January 2016 02:16 PM IST
மறைந்த தொழிலதிபர் செட்டிநாட்டரசர் எம்.ஏ.எம். ராமசாமியின் சகாப்தம் இந்த உலகம் இருக்கும் வரை ஒலிக்கும் என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல நீதிபதி எம். சொக்கலிங்கம் புகழாரம் சூட்டினார்.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 2016 புத்தாண்டின் சிறப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், காரைக்குடி நாராயணன் எழுதிய எம்.ஏ.எம். ஒரு சகாப்தம் என்ற நூலை வெளியிட்டும், அவரது உருவப்படத் திறப்பில் பங்கேற்றும் நீதிபதி பேசுகையில், செட்டிநாட்டரசர் குடும்பத்தினர் பண்பானவர்கள். அவர்கள் ஆன்மிகப் பணி, கல்விப் பணி மற்றும் தமிழிசையை வளர்த்தவர்கள். அதே வழியை, எம்.ஏ.எம். ராமசாமியும் பின்பற்றினார். தொடர்ந்து, தமிழிசைக்கு ஆதரவு தந்து வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்விப் பணியோடு மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மருத்துவக் கல்லூரியைத் தொடங்கினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அவரது சகாப்தம், உலகம் இருக்கும் வரை ஒலிக்கும் என்றார்.
விழாவில், நீதிபதி வெளியிட்ட நூலை தொழிலதிபர் எஸ்.எல்.என்.எஸ். நாராயணன் செட்டியார் பெற்றுக்கொண்டார். எம்.ஏ.எம். உருவப்படத்தை தேவகோட்டை ஜமீன்தார் சோம. நாராயணன் செட்டியார் திறந்துவைத்தார். முன்னதாக, கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றார். காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவர் முத்து. பழனியப்பன், திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் கவிஞர் காரைக்குடி நாராயணன், தமிழக வேளாண்மைத் துறைச் செயலர் ராஜேந்திரன், செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, விசாலாட்சி கண்ணப்பன், மாணிக்கம் செட்டியார் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
இதில், எம். ராமசாமியார் இருவர் என்ற தலைப்பில், மதுரை பேராசிரியர் விசாலாட்சி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறினார்.
No comments :
Post a Comment