Monday, January 16, 2017

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)




          
 காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
‘செட்டிநாடும் செந்தமிழும்’
என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
                      அறிவிப்புமடல்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாக கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.       
  இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும்வண்ணம், தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்றது; இதன்வழி அடுத்ததலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகிவருகின்றார்கள். ஆண்டுதோறும் திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தம் பெற்றோர் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுப்பொழிவு நிகழ்த்தப்பெறுகின்றது;. அவை நூலாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. டாக்டர் சுதா சேஷய்யன் (தாய்தன்னைஅறியாத…), முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு (கம்பனின் மனவளம்), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் எண்ணமும் வண்ணமும்), முனைவர் பழ. முத்தப்பன் (கம்பனில் நான்மறை),முனைவர் ச. சிவகாமி (கம்பர் காட்டும் உறவும் நட்பும்), முனைவர் தெ. ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்), நாஞ்சில்நாடன் (கம்பனின் அம்பறாத் தூணி), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் விண்ணோடும் மண்ணோடும்), திரு, சோம. வள்ளியப்பன் (எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம்), அரிமழம் பத்மநாபன் (கம்பனில் இசைக்கலை) ஆகியோர் உரையாற்றி, அந்த உரைகள்,  அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.  மாதந்தோறும் முதற் சனிக்கிழமைகளில் புதியகோணங்களில் கம்பன்காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தபெற்று, அவை அச்சில் வெளிவர தொகுக்கப் பெற்றுவருகின்றன. முனைவர் சொ.   சேதுபதியின் கம்பன்காக்கும்உலகு, முனைவர் மு.பழனியப்பன் கம்ப வானியல், முனைவர் க. முருகேசனின் தெய்வமும் மகனும்  ஆகிய நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளன.    சாகித்திய அகாதமியுடன் இணைந்து கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற பொருளில் இலக்கிய அரங்கம் நடத்தப்பெற்றது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அ.ச.ஞா, பேரா. ந. சுப்புரெட்டியார்டு, செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டு கொண்டாடப்பெற்றன. கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் டி.கே.சி பிள்ளைத்தமிழ், எம்.எஸ். பிள்ளைத்தமிழ் ஆகியனவும் இவ்வாண்டில் வெளியிடப்பெற்றன. இவ்வாறு  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் காரைக்குடி கம்பன் கழகம் நினைந்து நினைந்துத் தமிழ்த்தொண்டுகளைச் செய்து வருகிறது.
       கம்பராமாயண ஆய்வினையும் வளர்க்க வேண்டி, 2013ஆம் ஆண்டில் கம்பன் திருநாள் பவளவிழா  தொடக்கத்தையும்,  2014ஆம் ஆண்டில் பவளவிழா நிறைவையும் ஒட்டி இரு பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கம்பன் கழகம், காரைக்குடி நடத்திப் பெருமைபெற்றது. இதன் தொடர்வாக  2016 ஆம் ஆண்டு அந்தமானில் ‘‘கம்பனில் இயற்கை’’ என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தியது. இதுவரை 5 கருத்தரங்கத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவ்வாண்டும்( 2017) செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தத் திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
              எதிர்வரும்  ஏப்ரல் மாதம்  7, 8, 9, 10  ஆகிய தேதிகளில் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகள் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.  ‘‘செட்டிநாடும் செந்தமிழும்’’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படத் திட்டமிடப்பெற்றுள்ளது. கோட்டையூரில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் அவர்களின் பூர்வீக இல்லத்தில் கவிதாயினி வள்ளிமுத்தையா அவர்களின் வரவேற்பில் செட்டிநாட்டு்ப் பாரம்பரியத்துடன் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிகழும் நாளன்றே ஆய்வுக்கோவையும் வெளியிடப்பெறும். அன்று முற்பகல் தொடக்கவிழாவும் பல அரங்குகளில் கட்டுரை வாசி்ப்புகளும் நிகழ உள்ளன. மதியம் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு முடிந்து காரைக்குடி கம்பன்கழகம் நடத்தும் ஆண்டுவிழாவில் பங்கேற்கவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. 
கருத்தரங்கக் குழுவினர்
செட்டிநாட்டு இளவல் எம்.ஏ.எம்.ஆர்  முத்தையா, திரு. அரு.வே. மாணிக்கவேலு, திரு.த. இராமலிங்கம்,  திருமதி விசாலாட்சி கண்ணப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் சொ. சேதுபதி, முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், முனைவர் மு.பழனியப்பன்,  முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் மா. சிதம்பரம், திரு. மீ. சுப்பிரமணியம், திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன், சொ. அருணன்
ஆய்வுத்தலைப்புகள்:
1.               செட்டிநாட்டு இலக்கியங்கள்
  சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற
2.               செட்டிநாட்டுத் தமிழறிஞர்களும், செட்டிநாடு போற்றிய தமிழறிஞர்களும்
பண்டிதமணி, சிந்நயச் செட்டியார், வ.சுப.மாணிக்கனார், சோம.லெ., முரு.பழ. ரத்தினம் செட்டியார், ச. மெய்யப்பன், சுப.அண்ணாமலை, வெ தெ. மாணிக்கம், மெ.சுந்தரம், தமிழண்ணல், லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், கம்பனடிப்பொடி, ராய. சொக்கலிங்கனார், ஏ.கே. செட்டியார், சொ. முருகப்பா, சின்ன அண்ணாமலை, சோம. இளவரசு, இரா. சாரங்கபாணி, பா. நமசிவாயம், தேசிகன். 

3.               செட்டிநாட்டுப் படைப்பாளிகளும், செட்டிநாடு போற்றிய படைப்பாளர்களும்.
பட்டினத்தார், கம்பர், பாடுவார் முத்தப்பர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, புதுவயல் சண்முகஞ் செட்டியார், தேவகோட்டை சிதம்பரஞ் செட்டியார், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், ஜீவா, பனையப்பச் செட்டியார்,  கண்ணதாசன், தமிழ்வாணன், அரு. இராமநாதன், அழ.வள்ளியப்பா, அர. சிங்காரவடிவேலன், சோம. சிவப்பிரகாசம், பெரி. சிவனடியான், பூ.அமிர்தலிங்கனார், முடியரசனார்.

4.               செட்டிநாடு சார்ந்த தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள்
கோவிலூர் வேதாந்தமடம், குன்றக்குடி திருமடம்,  பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் நூலகம் (தனவைசிய சங்கம்),  ரோஜாமுத்தையா நினைவு நூலகம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, காரைக்குடி சார்ந்த இந்துமதாபிமான சங்கம்,  இராமசாமி தமிழ்க்கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அண்ணா தமிழ்க் கழகம், வள்ளுவர் கழகம்    கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் மற்றும்  புதுவயல் சரசவதி சங்கம், குருவிக்கொண்டான்பட்டி கவிமணிமன்றம், பி. அழகாபுரித் தமிழ்மன்றம், குமரன், ஊழியன் தனவணிகன், தமிழ்நாடு, தென்றல் போன்ற இதழ்கள்.

இவை தவிர  கருத்தரங்கத் தலைப்பு சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். வாழும் சான்றோரைப் பற்றி எழுதலாம். வாழ்ந்துவருவோர் பற்றி எழுதும்போது அச்சான்றோரின் அனுமதியையும், வழிகாட்டலையும் பெறுவது நலம்.  




 ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கான நெறி முறைகள்:
1.        ஆய்வுக் கட்டுரையைத் தனியொருவராகத் தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம்;
2.   ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்த முயற்சியாக இருத்தல்வேண்டும். ஆய்வாளரே அவரின் கருத்துகளுக்குப் பொறுப்பாவார். கண்டிப்பாக  பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ, மின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல்கூடாது. பொய்த்தகவல்கள் தரப்படக் கூடாது.  அவ்வாறு இருப்பின் அக்கட்டுரை வெளியிடப்பட மாட்டாது. பதிவுக்கட்டணம் திருப்பியளிக்கப் பெறமாட்டாது. தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங்கொண்டும் திருப்பி அனுப்பப்பெறாது. கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்க கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது
3.   ஆய்வுக்கட்டுரைகள் ஏ4 தாளில் இருவரி இடைவெளியுடன் , நான்கு பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடு எழுத்துருவில்  கணினி அச்சாக்கி, மின்னஞ்சல் வழி அல்லது குறுவட்டு வடிவில்  அனுப்பவேண்டும்..
4.        கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  அனுப்பப்பெறும். எனவே கட்டாயம் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்.
5.   கருத்தரங்க ஆய்வாளர்கள் தலைப்புகளைத் தேர்ந்து காரைக்குடி கம்பன் கழக மின்னஞ்சலிலோ, முகநூலிலோ அனுப்பி ஒப்புதல் பெற்றுக்கொள்வது நலம். இதன் காரணமாக ஒரு பொருளையே பலர் எழுதுவது தவிர்க்கப்படும்.

ஆய்வுக் கட்டுரைக்கான கட்டணமும் செலுத்தும் முறையும்
ஆய்வுக்கட்டுரையுடன் ரூ 700 (ரூபாய் எழுநூறு மட்டும்) கட்டணமாகச் செலுத்தப்பெற வேண்டும்.. வெளிநாட்டுப் ஆய்வாளர்களுக்குக் கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் $ 60/= கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக “KAMBAN ACADEMY” என்றபெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பிட கடைசி நாள்
பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும் கட்டணமும் 28-02-2017 க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். காலதாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்கப்படாது.







காரைக்குடி கம்பன் கழகம்  - ‘செட்டிநாடும் செந்தமிழும்’
பன்னாட்டுக் கருத்தரங்கம் - பதிவுப் படிவம்
  பெயர்:        
  கல்வித்தகுதி:
 தற்போதையபணி:
 பணியிட  முழு  முகவரி  (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 இல்லமுழுமுகவரி:     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 கைபேசி எண்:     (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்)                                            
  e-mail id  (மின்னஞ்சல்) (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்.)
கட்டணத்தொகை:
கட்டுரைத் தலைப்பு 
வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்:             
வரைவோலைஎண்:
 இடம்:
நாள்:                                                                                                                                     கையொப்பம்
(படிவத்தினைப் படிகள் எடுத்தும் அனுப்பலாம்)
கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி
Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, "Sayee" 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India
மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com,
வலைப்பூ ; kambankazhagamkaraikudi.blogspot.com
முகநூல்: https://www.facebook.com/karaikudi.kambankazhagam
தொலைபேசி தகவல் தொடர்பிற்கு
முனைவர் மு.பழனியப்பன் 9442913985 முனைவர் மா. சிதம்பரம், 9486326526
          

Saturday, January 7, 2017

காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய மூதறிஞர் மூவர் நூற்றாண்டுவிழா


     7.1.2017 அன்று காரைக்குடி கம்பன் கழகம் தமிழறிஞர்கள் அ. ச. ஞானசம்பந்தம், பேரா. ந. சுப்புரெட்டியார், செம்மல் வ.சுப. மாணிக்கனார் ஆகியோரின் நூற்றாண்டுவிழாக்களை ஒரு சேரக் கொண்டாடியது.
     காரைக்குடி கம்பன் கழகத்தின் பெரும்பாலான நிகழ்வுகளில் கலந்து கொண்டுச் சொற்பெருக்காற்றியவர் அ.ச.ஞானசம்பந்தனார். கம்பன் அடிப்பொடி அவர்களால் காரைக்குடிக்கு ஆசிரியராக அறிமுகம் செய்யப்பட்டவர் ந. சுப்புரெட்டியார். கம்பன், வள்ளுவம் போன்ற நூல்களை எழுதித் திறனாய்வு உலகில் தனக்கென தனித்த இடம் பிடித்தவர் வ.சுப. மாணிக்கனார். இவர்களின் தமிழ்த்தொண்டால் தமிழ் பெருமை கொண்டது என்று இவர்கள் மூவரையும் அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்.
     அ.ச.ஞா வின் தமிழ்த் தொண்டு பற்றி சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம் பேசினார். அ.ச. ஞா அவர்கள் அனைவரையும் ஒருமை வாடா போடா என்று அழைக்கும் வாஞ்சை மிக்கவர். அவரோடு ஒன்றாகச் சென்னைக் கம்பன் கழகத்தில் இணைந்து செயல்பட்ட எ.வி.எம் சரவணன் அவர்களை மட்டும் அவர் மரியாதைக் குறைவாக அழைத்ததில்லையாம். இது பற்றி எ.வி.எம் சரவணன் அவர்களே குறிப்பிட்ட செய்தி  அ.ச. ஞா என்னை மட்டும் அப்படி அழைக்காமைக்குக் காரணம் அ.ச.ஞாவின் அப்பா பெயர் சரவண முதலியார். அவரின் பெயர் கொண்டிருப்பதால் எ.வி.எம் சரவணன் அவர்களை அ.ச. ஞா அவர்கள் மரியாதை குறைவாக அழைப்பதில்லையாம். தந்தையின் மீது மதிப்பு கொண்ட பேரறிஞர் அ.ச.ஞா. இதனை இற்றைக்கால இளைஞர்கள் உணரவேண்டும்  என்று த. இராமலிங்கம் பேசினார்.
     இவரின் பேச்சிற்குப் பின்பு அ.ச.ஞா குடும்பம் சார்ந்த திரு மெய்கண்டான் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அதில் அ.ச.ஞா. பெருமை சேர்ந்த அனைத்து நிறுவனங்கள், அன்பர்களை அவர் நினைவு கூர்ந்தார்.
     நூற்றாண்டு விழா காணும் சுப்பு ரெட்டியார் பற்றி சாகித்திய அகாதமி பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் பேசினார். பேராசிரியரின் மாணவரான இவர் இந்நிகழ்ச்சி சுப்புரெட்டியார் பற்றி நடக்கும் 109 வது நிகழ்ச்சி என்றார். மேலும் பெரியார் பற்றியும் நூல் எழுதிய வைணவர், சைவ குடும்பத்தவர் ந. சுப்புரெட்டியார். இவர் சமயங்களை நம்பினார். ஆனால் சமயத்தின் வழியாக நடத்தப்படும் மூட நம்பிக்கைகளை பெரியார் வழி நின்று வெறுத்தார் என்றார். ந. சுப்புரெட்டியார் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரின் தமிழ்ப்பணி அளப்பரியது என்றார். சுப்புரெட்டியார் அவர்களின் திருமகனார் திரு இராமலிங்கம் அவர்கள் ஏற்புரை நல்கினார். அதில் அவர் நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது கம்பன் அடிப்பொடி அவர்களை நேரடியாகக் கண்டேன். அதுமுதல் அவரின் நிகழ்ச்சிச் செயலாக்கத் திறனைக் கண்டு வியந்துள்ளேன் என்றார். அவரின் கம்பன் கழகம் சுப்புரெட்டியாரின் நூற்றாண்டைக் கொண்டாடுவது சிறப்பு என்றார்.
     செம்பல் வ.சுப. மாணிக்கனார் பற்றி முனைவர் பழ. முத்துவீரப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார். யாயும் யாயும் யாராகியரோ என்ற குறுந்தொகைப்பாடல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனைக் காதல் பாடல் என்று எல்லோரும் குறிப்பிடுவர். ஆனால் இதனைக் கற்பு காலத்தில் முதன் முதலாகத் தலைவன் தலைவியைச் சந்திக்கும் நிகழ்வில் சொன்னது என்றார் வ.சுப. மா என்று குறிப்பிட்டார். தமிழக முதல்வரிடம் ஒருநாள் முதல்வர் பொறுப்பைத் தாருங்கள். தமிழை அரியணை ஏற்றுகிறேன் என்று முழங்கியவர் வ.சுப. மாணிக்கனார் என்றார். இவரின் பேச்சிற்குப் பின்பு வ.சுப. மா அவர்களின் புதல்வர் பூங்குன்றன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். பதவிகளை தொண்டு எனக்கருதியவர் வ.சுப. மாணிக்கனார் என்றார் அவர்.
     விழாவில் ரெ.முத்துக்கணேசனார், கவிஞர் மீனவன் ,பேராசிரியர்கள் செந்தமிழ்ப்பாவை. சிதம்பரம், பாலசுப்பிரமணியன், இராசாராம் போன்ற பலரும் கலந்து கொண்டனர்.
     விழாவில் நன்றியுரையை மு.பழனியப்பன் வழங்கினார். விழா முத்தமிழறிஞர் விழாவாக நடைபெற்றது.
    
























Saturday, December 24, 2016

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்




காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் -

கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1

பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.

பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

நாள்- 28.1.2017
நேரம் 0 9.30 மணி
இடம்- கிருஷ்ணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி

எதிர்பார்க்கும் தகுதிகள்

உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும் சிறப்பான தேர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முதற்பரிசு- ரூ 1000
ஊக்கப்பரிசுகள் - பங்கேற்கும் ஐவரில் ஒருவருக்கு என ஒவ்வொருவருக்கும், ரூ 250

போட்டிக்குரிய பகுதி

அயோத்தியா காண்டம் பள்ளிப்படை படலத்தில் 22 பாடல்கள்
மைஅறு மனத்து என்று தொடங்கும் பாடல் முதல் தூய வாசகம் சொன்ன என்று தொடங்கும் பாடல் முடிய

----------------------------------------------------------------

கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி -2

6,7,8 ஆகிய வகுப்புகளிலபயிலும் மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

முதற்பரிசு ரூ1000

ஊக்கப்பரிசு - போட்டியில் பங்கேற்போரில் ஐவருக்கு ஒருவர் என ஒவ்வொரு வருக்கும் 250 ரூபாய்

மனப்பாடப்பகுதி

திருஅவதாரப்படலத்தில் 22 பாடல்கள்
மாமணி மண்டபம் மன்னி என்று தொடங்கும் பாடல் முதல் எந்தை நின் அ்ருளினால் என்று தொடங்கும் பாடல் வரை.

-------------------------------------------------------

குறிப்பு
1. பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் இருவர் மட்டுமே உரிய அனுமதியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

2. மனப்பாடப்பகுதி வேண்டுவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்க.

கம்பன் கழகம்
சாயி 1. ஈ செட்டிநாடுடவர்ஸ்,
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
-----------------------------------------------------

பிற தொடர்பிற்கு
9445022137
---------------------------------------------
கம்பராமாயணப் பேச்சுப் போட்டிகள்

தமிழக அனைத்துக் கலை அறிவியல் , பொறியியல், தொழில் நுட்ப கல்வியியல் கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி - 2016-17

போட்டி நடக்கும் நாள் - 28-1-2016
இடம் - காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு

போட்டி -1 கம்பராமாயணப் பேச்சுப் போட்டி

காலை 10 மணி முதல்

முதற்பரிசு ரூ 3500

பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள அவரின் தாயார் வேம்பு அம்மாள் நினைவுப் பரிசு

இரண்டாம் பரிசு ரூ 1000

திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு

ஊக்கப்பரிசு ரூ 500 இருவருக்கு

தலைப்பு

1 கம்பனில் மனித நேயம்
2. கம்பனில் மனித உணர்வுகள்
3. கம்பனில் மனித ஆற்றல்

இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்

போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.

சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.
----------------------------------------------------------------------------
 













Saturday, December 17, 2016

புத்தாண்டில் காரைக்குடி கம்பன் கழகம் கொண்டாடும் நூற்றாண்டுவிழாக்கள்

மூதறிஞர் மூவர் நூற்றாண்டு விழா

        அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க்கம்பன் கழக 2017  ஜனவரி மாதத் திருவிழா 7-1-2017 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா  திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. கம்பன் கழகத்தோடு ஒட்டி உறவாடி உதவி காதலாகிக் கசிந்து உருகிக் கம்பனைப் போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானரான முப்பெரும் மூதறிஞர்களின் நூற்றாண்டு விழாவாக நிகழ்கின்றது.

மாலை 5. முதல் 5.30 வரை தேநீர் , முன்மாலை சிறுநொறுக்கும் உண்டு

5.30 மணிக்கு இறைவணக்கம்

5.35. மணிக்கு வரவேற்புரை. திரு. கம்பன் அடிசூடி

5.45. மணிக்கு விருந்தினர் சிறப்பிப்பு, அரு,வே . மாணிக்க வேலு

5.55 மூதறிஞர் அ.ச. ஞானசம்பந்தம், பற்றி
சென் னை உயிர்நீதி மன்ற வழக்கறிஞர் த. இராமலிங்கம் அவர்களின் பொழிவு

6.25 மணிக்கு ஏற்புரை - திரு. ஞா. மெய்கண்டான்

6.35. மணிக்கு பேராசிரியரின் இலக்கிறத்திறன். நூல் வெளியீடும்
மூதறிஞர் ந. சுப்பு ரெட்டியார் பற்றிய பொழிவும்
நிகழ்த்துபவர்  முனைவர் அ.சு. இளங்கோவன்

7.05  மணிக்கு ஏற்புரை
7.15 மணிக்கு மூதறிஞர் வ.சுப. மாணிக்கம்
அண்ணமாலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசான்
பேராசிரியர் பழ. முத்து வீரப்பன்

7.45 மணிக்கு பேரா. வ.சுப. மா. பூங்குன்றன் அவர்களின் ஏற்புரை

7.55 நன்றியுரை  பேரா. மு.பழனியப்பன்
8.05 விருந்தோம்பல்

கமபன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.

அன்பும் பணிவும் இசைந்த
கம்பன் கழகத்தார்.

நன்றிகள்

கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும் பொன்னமாராவதி அன்னை மெடிக்கல்ஸ்  அரு,வே. மாணிக்கவேலு சரசுவதி ஆச்சி அறக்கட்டனை

நமது செட்டி நாடு இதழ்

நிகழ்ச்சி உதவி
13.1.2017 உ 81 ஆம் அகவை நிறைவுற்று 82 ஆம் பிறந்தநாள் காணும் கவிஞர் மு.நா. நாராயணன் கல்யாணி ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு.