"என்றுமுள தென்றமிழை இயம்பியிசை கொண்ட கம்பன் புகழ்பாடி நூற்றாண்டு கண்ட "கம்பவாணர்" கோவிந்தசாமி முதலியார் கம்பனடி சார்ந்தார்.
கம்பன் பணிக்கென்றே தம்மை ஒப்புக்கொடுத்து, கம்பன் அடிப்பொடி சா.கணேசன் அவர்களுடன் இணைந்து இவர்செய்த திருப்பணிகள் மறக்கொணாதவை. காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் பிறந்த தேரழுந்தூரில் விழா எடுத்த முதலாண்டில், கோவிந்தசாமி முதலியாரவர்கள், "கம்பன் ஊர்வலத்தை" ஆமருவியப்பன் ஆலய வாயிலிலிருந்து, "கம்பன் வாழ்க!" எனச் சொல்லித் தொடங்கிவைத்து, நடந்துவந்ததும், மறக்க இயலாதவை. புதுவை மண்ணின் "கம்பநட்சத்திரம்" மண்ணிலிருந்து விண்ணேகி ஒளிரத் தொடங்கிய நாள் இதுவென்று வரலாறு குறித்துக்கொள்ளும்!
அன்னார்க்குப் புகழ்மாலை சூட்டிப் பணிகிறது காரைக்குடி கம்பன் கழகம்!