காரைக்குடி கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா ஏப்ரல் மாதம் 7,8.9 காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஏப். 10 ஆம் நாள் நாட்டரசன் கம்பன் அருட்கோவிலில் நடைபெற்றது. கம்பன் புகழ் பாடும் சிறந்த இலக்கியவாணர்கள் இதில் கலந்து கொண்டனர். பல்லோரும் கேட்டு மகிழ்ந்தனர்.
முதல் நாள் விழா
கிருஷ்ணன் கோயிலில் இருந்து தமிழ் அன்பர்கள் புடைசூழ இராமனும் இலக்குவனும் பவனிவர கம்பன் விழா இனிதே தொடங்கியது.
இறைவணக்கம், மலர் வணக்கம், கம்பன் அடிப்பொடி வணக்கம் ஆகியன முறையே நடைபெற்றன.
கம்பன் அடிசூடி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதில் காரைக்குடி கம்பன் கழகத்தின் இடைவிடாத இனிய பணியை நினைவு கூறினார். வந்திருந்த சான்றோர்களை அறிமுகப்படுத்தி அவர் ஆற்றிய வரவேற்புரை அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து தொடக்கவுரையை பேரா. ந. விஜயசுந்தரி வழங்கினார்.
அதில் அவர் காப்பவனைப் பாடாத கம்பனை மன்னர்கள் உயர்த்தாத இடைவெளியை இன்றைய கம்பன் கழகங்கள் நி்ரப்பி கம்பனுக்குத் தனியாசனம் அமைத்துத் தந்துள்ளனர் என்றார்
தொடர்ந்து கம்பன் அடிசூடி நிறுவியுள்ள பழனியப்பன் மீனாட்சி அறக்கட்டளைப் பொழிவு நூலான கம்பனைப் படைத்த கைகேயி நூலை வெளியிட்டு நாஞ்சில் நாடன் கம்பனின் சொல்வண்ணம் குறித்து உரையாற்றினார். இதனை திரு .அண. வயிரவன் அவர்கள் பெற்று மகிழ்ந்தார்.
மேலும் தமிழில் தொடர் அடைவுகளையே தொடர்வதைத் தனிப்பணியாகக் கொண்ட மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் (ஓய்வு) பாண்டியராஜா அவர்கள் கம்பன் அடிப்பொடி விருது பெற்று மகிழ்ந்தார்கள். அவரின் இனிய பணி நூலாகவும் வரவேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து திரு ராஜாராமன் அவர்கள் கம்பனின் இராம வண்ணத்தைப் பேசினார். திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் பாடிய அரங்கனைக் கம்பன் தன்வசத்தில் பாடினார் என்றார்.
இதனைத் தொடர்ந்து தலைமை தாங்கிய பேரா தி. இராசகோபால் அவர்கள் கம்பன் கழகப் பணிகளைப் பாராட்டினார்.
அவர் கம்பனுக்குத் தேரோட்டியது காரைக்குடி கம்பன் கழகம். அந்தத் தேர் இலக்கிய உலாவாக எங்கும் பரவியது. இராமானுசரின் நினைவைப் போற்றும் இந்நாளில் கம்பனின் சாதி மதம் பாராத இராம சகோதரபாசம் இராமனுசருக்கு முன்னோடி என்றார்.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்க்குப் பரிசுகளை திருமதி வள்ளி முத்தையா அவர்கள் வழங்கினார்.
இரண்டாம் நாள் விழா
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் இரண்டாம் நாள் கம்பன் திருவிழா 8.4.2017 அன்று ்மாலை ஐந்தரை மணியளவில் நடைபெற்றது. இதில் தனிப் பேருரையைத் திருமிகு பழ. கருப்பையா வழங்கினார். அவர் கம்பனின் கருத்து வண்ணம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன் உரையில் ஒரு கவிஞன் காலம் கடந்து நிற்கிறான் என்றால் அரசியல் கடந்து நிற்கிறான் என்றால் அவனின் தேவை இன்னும் இந்தச் சமுதாயத்திற்குத் தேவை என்று பொருள். திரைப்பட நடிகைகள் போல கலைஞன் வந்ததும் சென்றுவிட முடியாது. அவர்கள் திரையில் தோன்றுவது புகழா இல்லை யில்லை. காலங்கடந்து நிற்பதுதான் புகழ். என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து கவியரங்கம் ்நடைபெற்றது. இதன் தலைவராக கவிதைப் பித்தன் இ.ருந்து கம்பனின் கவி வண்ணத்தை ஆறு கவிஞர்கள் வழி வெளிப்படுத்தினார்.
கவிஞர்களில் கம்பன் தனித்துவமானவன். அவன் பெயரால் கழகம் என்பதால் நான் கவிதை புனையவந்தேன் என்றார். ்அன்பு பற்றிச் சிங்கப்புர் கவிஞர் திரு அ.கி. வரதராசன் கவிதை வழங்கினார். அவரின் காவடிச் சிந்து வண்ணம் அனைவரையும் ஈர்த்தது. தொடர்ந்து தொண்டு வண்ணம் பற்றி கவிஞர் வி,கே. கஸ்தூரி நாதன் கவிதை வழங்கினார். உண்மைத் தொண்டர்களுக்கு கம்பனில் பல எடுத்துக்காட்டு உண்டு என்றார் அவர். தொடர்ந்து கம்பனின் வீர வண்ணமே அனைத்து வண்ணங்களுக்கும் சிறப்பு என்றார் வல்லம் தாஜ்பால். இவரைத் தொடர்ந்து தோழமை வண்ணம் பற்றி தஞ்சை இனியன் கவி பாடினார். வேடம் போடாத வேடன் குகனின் தோழமை வண்ணத்தை அவர் தந்தார். தொடர்ந்து அறம் பற்றி கிருங்கைசேதுபதி பாடினார். அறத்தால் உலகை வெல்லலாம் என்றார் அவர். நிறைவாக காதல் வண்ணம் பாடினார் திரு வி.ம. இளங்கோவன்.
கவியரங்கின் சில முத்துக்கள் பின்வருமாறு
கணேசனே பிள்ளையார் சுழிி போட்டுத் தொடங்கியது கம்பன் கழகம்
அதனை அவன் தம்பி பழனியப்பன் தற்போது நிகழ்த்துகிறார்.
ஏடிஎம் பொத்தானை அமுக்கினால் பணம் தரும்
வாக்கு எந்திரம் பணத்தினைத் தள்ளினால் பொத்தானை அமுக்கும்.
மூன்றாம் நாள் விழா
காரைக்குடி கம்பன் கழகத்தின் மூன்றாம் நாள் விழா காலையும் மாலையும் என முழுநான் விழாவாக அமைந்தது.
காலையில் கோட்டையூர் வள்ளல் அழகப்பர் அவர்கள் பிறந்த பராம்பரிய வீட்டில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான கருத்தரங்காக மலர்ந்தது.
இதற்குத் தலைமை வகித்து செட்டிநாடு இதழின் புரலவர் திரு. இராஜாமணி முத்துக்கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தன்னுரையில் நகரத்தார் சமுதாயத்தின் சிறப்புகள் அறம் பேணும் பண்புகள் பற்றி எடுத்துரைத்தார் . மேலும் நாட்டரசன் கோட்டை கம்பர் அருட்கோயிலைச் செப்பம் செய்யும் பணியைச் செட்டிநாடு குழுமம் செய்ய முன்வரும் என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் செட்டிநாடு குழுமத்தின் சார்பாக நிதியளித்தும் சிறப்பித்தார்கள்.
மேலும் இவ்விழாவில் சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசன் எழுதிய அரிய மனிதர் அழகப்பர் என்ற நூலை கவிதாயினி வள்ளி முத்தையா வெளியிட முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார் திரு. இராஜாமணி முத்துக்கணேசன்.
தொடர்ந்து செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் கட்டுரையாளர்கள் வழங்கிய கட்டுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பெற்ற செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற நூலைத் திரைப்பட இயக்குநர் திரு கரு. பழனியப்பன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இதில் மாறிவரும் சமுதாயச் சூழல் பற்றிப் பேசினார்.
இதன் பிறகு கருத்தரங்கம் ஐந்து அரங்குகளில் நடைபெற்றது.
கருத்தரங்க நிறைவு விழா 3.30 மணிக்குத் தொடங்கியது. இதற்குத் தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே அவர்கள் தலைமைதாங்கி நகரத்தார் பரம்பரை பற்றிப் பேசினார். திரு. சொ. சொ.மீ சுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மாலை நிகழ்ச்சி, காரைக்குடியில் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பட்டிமண்டபமாக நடைபெற்றது. சொல்வேந்தர் சுகி.சிவம் நடுவராக இருந்து இதனை வழி நடத்தினார். பேராசிரியை ருக்மணி பன்னீர் செல்வம், செல்வி நா. ஹேமலாதா,செல்வி மணிமேகலை ஆகியோர் இராமனுக்கு மிகுதியும் இக்கட்டை உண்டாக்கியவர் கைகேயி என்று வாதிட்டனர்.
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம், திரு. த.க. தமிழ்பரதன்,திரு. தமிழ் திருமால் ஆகியோர் இராமனுக்குப் பெரிதும் இக்கட்டை உண்டாக்கியவர் சுக்ரீவனே என்று பேசினர்.
பேராசிரியர் பழ.முத்தப்பன், திரு. சு. சதீஸ்குமார், பேராசிரியர் மா. சிதம்பரம் ஆகியோர் இராமனுக்கு மிகுதியும் இக்கட்டை உண்டாக்கியவர் வீடணனே என்று வாதிட்டனர்.
முக்குழுவின் வாதங்களைக் கேட்டு வீடணனே என்று பட்டிமன்றத் தீர்ப்பினை எழுதினார் சொல்வேந்தர் சுகி.சிவம்.
நான்காம் நாள் விழா
கம்பன் அருட்கோயில் வழிபாடு நாட்டரசன் கோட்டையில்நடைபெற்றது, மலர்வணக்கம்,அ ருட்கவி ஐந்து ஆகியன நிகழ்ந்தன. வரவேற்புரையை திரு கண.சுந்தர் வழங்கினார். இவ்விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையேற்று கம்பன் கவியின்பத்தை மொழிந்தார்கள். தொடர்ந்து திரு.வி,யோகேஸ்வரன் கம்பனின் ஆற்றல்வண்ணம் பற்றிப் பேச, திரு. இரா. மாது கம்பனின் பாத்திரவண்ணம் பற்றிப் பேச சுவைஞர்கள்
சுவைத்தனர்.
நன்றியுரையுடன் விழா இனிதே நிகழ்ந்தது.