காரைக்குடியில் கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் இலக்கியக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
சாகித்ய அகாதெமியும் காரைக்குடி கம்பன் கழகமும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் இக்கருத்தரங்கை நடத்தின. இதில், சாகித்யஅகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் சொ. சேதுபதி பேசுகையில், படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் இடையில் இலக்கிய அரங்கம் வாயிலாக உறவுப் பாலம் அமைத்துச் செயல்படும் சாகித்ய அகாதெமி, இந்திய மொழிகளின் வாயிலாக மனிதம் வளர்க்கிற இலக்கிய அவையாகும். உலக மானுடம் பாடிய கம்பன் கவி குறித்துத் திறனாய்வு செய்த தமிழறிஞர்கள் மிகப் பலர். அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். வ.வே.சு. ஐயர் தொடங்கி கி.வா.ஜ, சொல்லின் செல்வர். ரா.பி. சேதுப்பிள்ளை, ரசிகமணி, ஜஸ்டிஸ் மகாராஜன், அ.ச. ஞானசம்பந்தன், அ.சீ.ரா, எஸ்.ஆர்.கே., ஜீவா போன்றவர்கள் கம்பனை எல்லார் மனங்களிலும் நிறைத்த திறனாய்வாளர்களாவர்.
ரசனை முறையிலும், ஒப்பீட்டு முறையிலும், அறிவியல் கோட்பாட்டு முறையிலுமாகப் பல்வேறு திறனாய்வுப் போக்குகளின் வழி ஏராளமான ஆய்வுகள் நூல்கள் தோன்றக் காரணமாக இருந்தது, காரைக்குடி கம்பன் கழகம்.
இங்கு வந்து பேசி வளர்ந்தவர்களே கம்பனின் திறனாய்வு நூல்களை மிகுதியும் உருவாக்கினர். அவர்களின் பணிகளையும் பார்வைகளையும் சிந்திப்பதற்காகவே இந்த இலக்கிய அரங்கம் என்று குறிப்பிட்டார்.
பின்னர், கம்பராமாயணத் திறனாய்வாளரான ஜஸ்டிஸ் மகாராஜன் குறித்து கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் கூறுகையில், கம்பனின் கவித்துவத்தைக் கற்றோர் மட்டுமின்றி, பாமரரும் உணரும் கம்பன் பாடல்களையே திரும்பத் திரும்ப, பாவனையோடு சொல்லி நடித்தும் காட்டுவார் ஜஸ்டிஸ் மகாராஜன் என்றார்.
கம்பன் புதிய பார்வை என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனைப் பற்றி பழ.முத்தப்பனும், சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை பற்றி முனைவர் யாழ்.சு. சந்திராவும் ஆய்வுரையாற்றினர்.
கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. அண்ணாமலை முன்னிலை வகித்தார். சிங்கப்பூர் தமிழறிஞர் ஸ்ரீ லெட்சுமி கருத்துரையாற்றினார். பேராசிரியர் ம.கார்மேகம், மெய்யாண்டவன், குன்றக்குடி ஆதீனக் கவிஞர் மரு.பரமகுரு உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முன்னதாக பேராசிரியர் மு. பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் செ. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.