Sunday, March 19, 2017

காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017

காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017 அன்று பட்டிமன்றமாக மலர்ந்தது. புதுவிதமாக பங்கேற்றவர் அனைவரும் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள்.
Vinaitheerthan Vino added 12 new photos — with கம்பன் கழகம் அம்பத்தூர்.
காரைக்குடி கம்பன்கழகத்தின் மாதக்கூட்டம் 4.3.2017 அன்று பட்டிமன்றமாக மலர்ந்தது. புதுவிதமாக பங்கேற்றவர் அனைவரும் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் உறுப்பினர்கள். நிறுவனர், தலைவர் உட்பட ஒன்பது பேர் அம்பத்தூரிலிருந்து வந்திருந்தனர். நான் அம்பத்தூர் கம்பன் கழகத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்பதால் அனைவரையும் பார்த்து மிக மகிழ்ந்தேன். கலந்து உரையாடினேன்.
பேராசிரியர் மு.பழநியப்பன் வரவேற்புரை நல்கினார். அம்பத்தூர கம்பன் கழக நிறுவனர் திரு எம்.எஸ்பி.அருணாசலம் செட்டியார், தலைவர் திரு பழ.பழநியப்பன், புலவர் உ.தேவதாசு, பேச்சாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். பட்டிமன்றத்திற்கு நடுவராக புலவர் உ.தேவதாசு வீற்றிருந்தார்.
'இராமனின் வெற்றிக்குப் பெரிதும் உதவியவர் அநுமனே' என்ற அணியில் திரு சே.பழ. விசுவநாதன், திரு தங்க. ஆரோக்கியதாசன், திரு சு.சங்கர் வாதிட்டனர். சீதையைக் கண்டு கணையாழி கொடுத்துத் துன்பம் நீக்கியது, இராமனிடம் கற்பினுக்கு அணியைக் கண்டுவந்து உரைத்தது, மருந்து மலை கொணர்ந்து இளையபெருமாள் வாட்டம் நீக்கியது, போரில் தேராகத் தோள் தந்தது, இறுதியில் பரதனிடம் சேதி சொல்லி 'எரியைக் கரியாக்கி' பரதன் உயிர்காத்தது அனைத்தையும் அழகாக எடுத்துரைத்தனர். அனுமன் செய்த உதவிக்கு ஈடில்லையென்பதை உணர்த்தத் தன்னையே இராமன் தந்தது போல 'புல்லுக' என்று அணைத்துக்கொள்ளச் சொல்லுகிறான் என்று கூறினர்.
'இராமனின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர் வீடணனே' என்ற அணியில் திரு கிளக்காடி வே.முனுசாமி, திரு இரா.இராசகோபாலன், திரு ஓ.லால்சுரேஷ் பாபு வாதிட்டனர். போரில் ஒவ்வொரு கட்டத்திலும் வெல்லும் வழி சொல்லி உதவியவன் வீடணன். 'இது வீடணன் தந்த வெற்றி' என்று இராமனே கூறிவிட்டான் என்று அருமையாக வாதிட்டனர். பட்டிமன்றப் பேச்சாளர்கள் அனைவரும் தமிழ்த்துறை சாராதவர்கள் என்பது சிறப்பு!
பட்டிமன்ற நடுவர் நண்பர் புலவர் உ.தேவதாசு அவர்களின் தீர்ப்பு அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. இராமனின் அவதார நோக்கமே இராவணன் வதமும், நல்லவர்களை காத்தலும் தான். மற்றவையெல்லாம் துணைக் காரணங்கள். வெற்றி என்பதே போரில் வெற்றி தான் எனபதைக் கம்பனிலிருந்து பல பாடல்களை எடுத்துக்கூறி நிறுவினார். அதற்கு அனுமனும் பிறரும் உதவியிருந்தாலும் வெற்றிக்குப் பெரிதும் காரணம் வீடணனே என்று தீர்ப்பு நல்கினார்.
பிறகு பேராசிரியர் திரு மு.பழநியப்பன் காணொலி மூலம் பேரா. பாண்டியராஜா அவர்கள் கட்டமைத்துள்ள கம்பராமயணத் தொடரடைவு தளமான tamilconcordance.in தளத்தை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஒரு தொடர் மூலத்தில் எங்கெங்கலாம் உள்ளது என்பதைக் காட்டும் தளம் இதுவாகும். இதேபோல சங்க இலக்கியங்களுக்கு பேரா.பாண்டியராஜா sangacholai.in தளம் அமைத்துள்ளதைச் சுட்டினார். நண்பர்கள் இவ்விரு தளங்களையும் பார்த்துப் பயன்கொள்ள வேண்டுகிறேன்.
பேரா திரு சிதம்பரம் நன்றி கூற சுவையான விருந்துடன் விழா இனிது நிறைவுற்றது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

No comments :

Post a Comment