தமிழ் இசை நுட்பங்களை தனது காப்பியத்தில் புகுத்தி, அந்த இசையை கால காலத்திற்கும் நிலைக்கச் செய்தவர் கம்பர் என முனைவர் அரிமளம் சு. பத்மநாபன் பேசினார்.
காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் மீனாட்சி- பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கம்பனில் இசைத்தமிழ் என்ற தலைப்பில் பத்மநாபன் பேசியது: இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழையும் கற்றுச் சிறந்தவர் கம்பர். தொல்காப்பியர் கூறிய பல்வேறு வண்ணங்களையும் தமது பாடல்களில் அமைத்து இசைத்தவர் கம்பர்.
அவரது காலத்தில் யாழுக்கு அடுத்த நிலையில் வீணை சிறப்பிடம் பெற்றிருக்கிறது. அக்காலத்துத் தமிழ் இசையின் நுட்பங்களை தனது காப்பியத்துள் இட்டுக் காலகாலத்திற்கும் நிலைக்கச் செய்த இசைப்பேரறிஞர் கம்பர். இயல்பாக அறியப்பெற்ற கம்பரை இசையோடு பாடிப்பழகினால் அவரது கவித்துவமும், புலமைத்திறமும் இன்னும் சிறப்பாக புலப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.நா.மீ. உபயதுல்லா தலைமை வகித்துப் பேசுகையில், இசையோடு தமிழைப் பாடுகிறபோது தான் அதன் உணர்வைச் சிறப்பாக அனுபவிக்க முடியும். திருக்குறளையும் திருமுறையையும் பாடுவதைப்போல் கம்பர் கவியையும் இசையோடு பாடி முத்தமிழின் தரத்தை நடைமுறைப்படுத்துவது நமது கடமை என்றார்.
முன்னதாக கம்பன் கழகச் செயலர் பழ.பழனியப்பன் வரவேற்றுப் பேசுகையில், கம்பரின் காவியத்துள் இடம்பெறும் இசை நுணுக்கங்களைப் பேசுவதோடு அவற்றை ஆவணப் படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
நிகழ்ச்சியில் சென்னை ஓஷியானிக் எம். எஸ். மெய்யப்பன், கம்பன் கழகத் துணைத் தலைவர் அரு.வே. மாணிக்கவேலு, திரைப்பட இயக்குநர் காரைக்குடி நாரயணன், பேராசிரியர்கள் சே.செந்தமிழ்ப்பாவை, மு.பழனியப்பன், மா. சிதம்பரம், நா.மீனவன், இராஜபாளையம், அறந்தாங்கி, தஞ்சாவூர் கம்பன் கழகத்தார் கலந்து கொண்டனர். கம்பன் கழக துணைச்செயலர் சொ. சேதுபதி நன்றி கூறினார்.
நன்றி- தினமணி நாளிதழ்

No comments :
Post a Comment